மகாபாரதம் | 5 உத்தியோக பருவம் | பகுதி - 13

மகாபாரதம் | 5 உத்தியோக பருவம் | பகுதி - 13
கிருஷ்ணரின் சகாயம் பாண்டவர்கள் பக்கம் முழுமையாக இருக்கின்றது என்பது அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரிந்தது. இந்த அற்புதத்தை பார்த்த பிறகும் துரியோதனனுக்கு நடக்கப்போகும் விபரீதம் அதன் விளைவுகள் விளங்கவில்லை. போராட்டத்தை தவிர்ப்பதற்கு அத்தனை பேர்களும் எடுத்துக்கொண்ட முயற்சிகள் யாவும் பயனற்றுப் போயின. யுத்தம் நிகழப் போவது உறுதியாயிற்று.

அஸ்தினாபுரத்தை விட்டு புறப்படுவதற்கு முன்பு கிருஷ்ணன் கர்ணனை தனியாக சந்தித்தான். இதுவரை அறியாத கர்ணனின் வரலாற்றை கிருஷ்ணன் கர்ணனுக்கு எடுத்து விளக்கினான். குந்தி தேவி சிறுமியாய் இருந்த பொழுது சூரியனுக்குரிய மந்திரத்தை உச்சரித்து அந்த சக்தியின் விளைவாக முதல் மகனாக கர்ணனை பெற்றெடுத்துவிட்டு மீண்டும் கன்னிகையானாள். ஆகையினால் தர்மசாஸ்திரப்படி அவன் பாண்டுவின் முதல் மகன் ஆகின்றான். குரு வம்சத்து அரசாங்கத்துக்கு அவனே தலைமகன் ஆகின்றான். இவ்வுண்மையை பாண்டவ சகோதரர்கள் அறிந்தால் அவர்கள் மகிழ்வோடு கர்ணனை அரசனாக சிம்மாசனத்தில் அமரச் செய்வார்கள். இவ்வுண்மையை துரியோதனன் அறிந்தால் பாண்டவர்களுடன் ஒன்றுகூடி கர்ணனை அரசனாக்குவான். அதன் விளைவாக இப்பொழுது உருவெடுத்து வருகின்ற பயங்கரமான யுத்தம் தடுக்கப்படும். மகிழ்ச்சிக்கூறிய இந்த செயல்கள் யாவும் இப்போது உன்னிடத்தில் இருக்கின்றன என்று கிருஷ்ணன் விளக்கியதை கர்ணன் முற்றிலும் நம்பினான். ஆயினும் மூன்று முக்கியமான காரணங்களை முன்னிட்டு அவன் தன்னைப் பற்றிய உண்மையை வெளிப்படுத்த ஆகாது என்று கிருஷ்ணனிடம் வேண்டிக்கொண்டான்.

முதலாவதாக தன்னை வளர்த்து வந்த அதிரதன் ராதை தம்பதிகள் கர்ணனை தங்கள் மகன் என்றே கருத வேண்டும். இந்த எண்ணத்திற்கு எந்த இடைஞ்சல்களும் வரக்கூடாது. இரண்டாவது எக்காரணத்தை முன்னிட்டும் தனக்கும் துரியோதனனுக்கும் இடையிலான நட்பு வேறு போக்கில் மாறக்கூடாது. மூன்றாவதாக அர்ஜுனனை கொல்வதாக விரதம் பூண்டிருக்கின்றேன். அப்பொழுது அதனை மாற்றியமைக்க தான் ஆயத்தமாக இல்லை. ஆகையால் யுத்தம் முடிவடையும் வரையில் கர்ணனை பற்றிய வரலாற்றை ரகசியமாகவே வைத்து இருக்க வேண்டும் என்று கிருஷ்ணரிடம் வற்புறுத்தி வேண்டிக்கொண்டான். கர்ணனுடைய சுயநலப் பற்றற்ற பாங்கையும் ஆண்மையையும் கிருஷ்ணன் பெரிதும் பாராட்டினார்.

விதுரரையும் சாத்யகியையும் தன்னோடு அழைத்துக் கொண்டு கிருஷ்ணன் நேராக குந்திதேவியை பார்க்கச் சென்றான். சபையில் நிகழ்ந்தவைகள் அனைத்தையும் தெரிவித்தான். அதற்கு குந்திதேவி தர்மத்தை சார்ந்திருந்த போராட்டம் ஒன்றை நிகழ்த்த வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் மக்களை பெற்றுள்ள பாக்கியம் க்ஷத்திரிய பெண்ணாகிய எனக்கு அமைந்திருக்கிறது. எனவே நான் பாக்கியவதி ஆகின்றேன். இனி வரப்போகும் யுத்தத்தில் அவர்கள் முறையாக ஈடுபட்டு வெற்றி பெறுவார்கள். கிருஷ்ணா என்னுடைய ஆசீர்வாதங்களை தயவு கூர்ந்து என் பிள்ளைகளுக்கு தெரிவிப்பாயாக என்றாள்.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!