மகாபாரதம் | 5 உத்தியோக பருவம் | பகுதி - 14
கிருஷ்ணரால் தூண்டப் பெற்ற குந்திதேவி கர்ணனை தனியாக சந்தித்து பேசினாள். கர்ணன் அவளுக்கு எப்படி மைந்தன் ஆனான் என்ற உண்மையை விளக்கினாள். கர்ணன் தன்னுடைய சொந்த சகோதரர்களாகிய பாண்டவர்களோடு வந்து சேர்ந்து கொள்ள வேண்டும் என்று தாய் குந்தி கர்ணனை வற்புறுத்தி வேண்டினாள். ஆனால் கர்ணன் அதற்கு சிறிதும் இணங்கவில்லை. கிருஷ்ணரிடம் தெரிவித்த அதே கருத்தை குந்திதேவியிடம் தெரிவித்து எக்காரணத்தை முன்னிட்டும் தான் பூண்டிருந்த தீர்மானத்தில் இருந்து பின்வாங்க ஆயத்தமாக இல்லை என்றும் தெரிவித்தான்.

குந்தி தேவி கிருஷ்ணரின் ஆலோசனையின் படி 2 வரங்களை கர்ணனிடம் கேட்டு வாங்கினாள். அதன்படி கர்ணன் அர்ஜுனனை தவிர மற்ற சகோதரர்கள் 4 பேரையும் எதிர்த்து ஆயுதம் ஏந்தி போர் புரிய கூடாது. கர்ணன் வைத்திருக்கும் நாகாஸ்திரத்தை அர்ஜூனன் மீது ஒரு முறைக்கு மேல் பிரயோகப்படுத்தக்கூடாது என்ற வரத்தை வாங்கினாள். கர்ணன் குந்தி தேவி கேட்ட வரத்தை தர சம்மதித்து ஒரு விண்ணப்பம் வேண்டினான். அதன்படி அர்ஜுனனை கர்ணன் கொல்ல வேண்டும். அல்லது அர்ஜுனனால் கர்ணன் கொல்லப்பட வேண்டும் இரண்டில் ஒன்று நிச்சயம். யுத்தத்திற்கு பிறகு அவன் உயிர் பிழைத்திருந்தால் அவனை தன் தலை மகன் என்று குந்தி பகிரங்கமாக அறிவிக்கலாம். அப்படி அல்லாது போர்க்களத்தில் கர்ணன் இறந்தபிறகு அவன் தலையை குந்திதேவி தனது மடியில் வைத்துக் கொண்டு தன்னுடைய மகன் இவன் என்று உலகிற்கு அறிமுகப்படுத்த வேண்டும். அதுவரையில் அவனைப் பற்றிய மர்மம் யாருக்கும் தெரியாமல் இருக்க வேண்டும் என்று குந்திதேவிடம் அவன் விண்ணப்பம் வைத்தான். குந்திதேவியும் அதற்கு சம்மதித்து அங்கிருந்து கிளம்பினாள்.

கிருஷ்ணன் உபப்பிளவியாவிற்கு திரும்பிவந்து அஸ்தினாபுரத்தில் நிகழ்வுகளையெல்லாம் மற்றவர்களுக்கு எடுத்து விளக்கினான். யுத்தம் புரிவதைத் தவிர வேறு உபாயம் ஏதும் அவர்கள் கைவசம் இப்போது இல்லை. இனி காலதாமதம் செய்யாமல் அவர்கள் யுத்தத்திற்கு தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டார்கள்.

துருபத மன்னன், அவன் மகன் திருஷ்டத்யும்னன், விராட வேந்தன், சிகண்டி, சாத்யகி, சேகிதானன். பீமன் ஆகியோரை தங்கள் வசமிருந்த ஏழு அக்ஷௌஹினி படைகளுக்கும் சேனாதிபதியாக நியமித்தார்கள். அர்ஜுனனும் கிருஷ்ணனும் ஆலோசித்து திருஷ்டத்யும்னனை அனைவருக்கும் தலையாக சேனாதிபதியாக நியமித்தார்கள். துருபத மன்னனுடைய வீரியமான மகன் திருஷ்டத்யும்னன் ஆவான். அவன் தன்னுடைய சகோதரி திரௌபதியை அர்ஜுனனுக்கு மணமுடித்து கொடுத்தவன். திரௌபதியே கௌரவர்கள் சபை நடுவே வைத்து அவமானப்படுத்தியது பாண்டவர்கள் 13 வருடங்களாக காட்டில் வசித்தது அகியவற்றை அவன் மனதில் வைத்திருந்தான். இதற்கு பழிக்குப்பழி வாங்கும் சந்தர்ப்பம் இப்பொழுது அவனுக்கு வாய்த்தது. பாண்டவர்களின் படைகள் அனைத்திற்கும் திருஷ்டத்யும்னன் தலையாய சேனாதிபதியாக பொறுப்பெடுத்துக் கொண்ட பொழுது வீரர்கள் அனைவரும் ஏகோபித்து கர்ஜித்தனர். சங்க நாதங்கள் முழங்கின. யானைகள் பிளிறின. பாண்டவப் படைகளை ஒருசேர போர்களம் செல்ல துவங்கினார்கள்.