பாண்டவர்களுக்கு உதவ வந்த சல்லியனை துரியோதனன் கட்டுப்படுத்தி விட்டான். துரியோதனனிடம் அகப்பட்டுக்கொண்ட சல்லியன் ஸ்தப்பித்துப் போய் நின்றான். சல்லியன் துரியோதனனுக்கு கொடுத்த வாக்கிலிருந்து இனி பின்வாங்குவது பொருந்தாது. துரியோதனைப் பார்த்து சல்லியன் நான் கொடுத்த உறுதிமொழிப்படி உனக்காக நான் போர் புரிகின்றேன். ஆனால் அதற்கு எனக்கு சிறிது அவகாசம் கொடு. என்னுடைய சகோதரியின் செல்வந்தர்கள் எத்தனையோ துயரங்களுக்கு பின் அவைகளை சமாளித்துக் கொண்டு வெளியே வந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு ஆறுதல் கூறுவது என் முதல் கடமை ஆகும். அந்த கடமையை நிறைவேற்றிய பிறகு நான் உனக்கு உரியவன் ஆவேன் என்று கூறினான். துரியோதனனும் சம்மதித்தான்.
சல்லியன் உபப்பிளவிய நகருக்கு சென்று பாண்டவர்களை சந்தித்தான். அந்த சந்திப்பு நெகிழ்ச்சி உண்டு பண்ணக் கூடியதாக இருந்தது. பாண்டவர்கள் 13 வருட காலம் நடந்த நன்மைகள் தீமைகள் அனைத்தையும் சல்லியனிடம் எடுத்து விளக்கி தற்போது அந்த கடினமான காலத்திருந்து விடுவிக்கப்பட்டு உள்ளதையும் விளக்கினார்கள். அனைத்தையும் உள்ளன்போடு கேட்ட சல்லியன் அவர்களுக்கு ஆறுதல் அளித்தான். சல்லியன் நடந்து கொண்டது பாண்டவர்களுக்கு மன அமைதியை உண்டு பண்ணியது. இனி வரப்போகும் யுத்தத்தில் தங்களுக்கு மாமாவும் அவருடைய சேனேயும் போரில் உதவி செய்வார்கள் என்ற மனக் கோட்டையில் பாண்டவர்கள் இருந்தார்கள். ஆனால் சல்லியன் தனக்கு வழியில் நிகழ்ந்த இக்கட்டையும் தர்ம சங்கடத்தையும் எடுத்து விளக்கினான். பாண்டவர்கள் பெரிதும் திகைத்துப் போயினர். இடி விழுந்தது போல் இருந்தது அவர்களுக்கு இந்த செய்தி. எதிர்பாராத வண்ணம் துரியோதனனுக்கும் சல்லியனுக்கும் நிகழ்ந்த யுத்த ஒப்பந்தத்தை அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டிய சங்கடத்தில் இருந்தார்கள். இதைக் குறித்து யுதிஷ்டிரன் ஆழ்ந்து எண்ணிப் பார்த்தான். அதன் பிறகு தன்னுடைய மாமாவிடம் தன்னுடைய வேண்டுதலை தெரிவித்தான். எப்பொழுதாவது கர்ணனுக்கு சல்லியன் சாரதியாக அமைய வேண்டிய நெருக்கடி யுத்தத்தில் வந்து அமைந்தால் அப்போது அர்ஜூனனுடைய பராக்கிரமத்தை கர்ணனிடம் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். இந்த உபகாரம் அவர்கள் அடைந்துள்ள நஷ்டத்துக்கு ஈடு செய்யும். சல்லியனும் இதற்கு சம்மதம் தெரிவித்தான்.
பாண்டவர்களுடைய பிரதிநிதியாக துருபத மன்னனுடைய புரோகிதன் ஒருவன் அஸ்தினாபுரத்திற்கு வந்து பாண்டவர்களுக்கு நியாயமாக உள்ள ராஜ்யத்தை திருப்பி கொடுத்து விடும்படி முறையாக கேட்டான். பாண்டவர்களுக்கு உரிய அஸ்தினாபுரத்து ராஜ்யத்தை துரியோதனன் முறைதவறி கைப்பற்றிக் கொண்டான். அதன்பிறகு அவர்கள் சொந்த முயற்சியால் தேடிக் கொண்ட இந்திரப்பிரஸ்தம் ராஜ்யத்தையும் அக்கிரமமான முறையில் துரியோதனன் அபகரித்துக் கொண்டான். பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் உள்ள ஒப்பந்தப்படி துரியோதனன் கொடுத்த வாக்குப்படியே பாண்டவர்களுக்கு உரிய ராஜ்யத்தை திருப்பி ஒப்படைப்பதே சரியான முறையாகும். அப்படித் தராவிட்டால் வரும் யுத்தம் பெரும் கேட்டை விளைவிக்கும் என்று தூதுவன் விளக்கினான். இதனை பீஷ்மர் முற்றிலும் ஆமோதித்தார். ஆனால் கர்ணன் அதனை முற்றிலும் எதிர்த்தான். திருதராஷ்டிர மன்னனோ பாண்டவர்களின் பிரதிநிதியை திரும்பிப் போகும்படி வேண்டிக்கொண்டான். பாண்டவர்களுக்கு தங்ளுடைய தரப்பை எடுத்து விளக்குவதற்கு சஞ்சயனை அனுப்பி வைப்பதாக தெரிவித்தார்.