மகாபாரதம் | 5 உத்தியோக பருவம் | பகுதி - 6

மகாபாரதம் | 5 உத்தியோக பருவம் | பகுதி - 6
சஞ்சயன் கூறியவற்றை கேட்ட திருதராஷ்டிரனின் மனசாட்சி அவனை துன்புறுத்தியது. இரவு முழுவதும் அவனுக்கு தூக்கம் வரவில்லை. விதுரனை வரவழைத்து தனக்கு அமைதி இல்லை என்றும் தனக்கு அமைதி வேண்டும் என்றும் ஏன் இப்படி நடக்கிறது உன்னுடைய புத்திமதி என்ன என்று கேட்டான். அறிஞனாகிய விதுரர் அன்று இரவு முழுவதும் திருதராஷ்டிரனிடம் நீதி நெறிகளை விளக்கினார். தர்மநெறி தவறுபவர்களுக்கு அமைதி கிடைக்காது. கபடமாக பாண்டவர்கள் கொள்ளையடிக்கப்பட்டார்கள். அப்படி இருந்தும் அவர்கள் சௌபாக்கியமாகவே வாழ்ந்து வருகின்றார்கள். தர்மத்திலிருந்து அவர்கள் பிசகாது இருந்ததே அதற்கு காரணமாக இருந்தது. ஆனால் கௌரவர்களுக்கு சொத்து ஏராளமாக இருந்தும் மனஅமைதி இல்லை. அதற்கு அவர்களது அக்கிரமமே காரணமாய் இருக்கிறது என்று இரவு முழுவதும் திருதராஷ்டிரனுக்கு ஏராளமாக தர்மத்தை போதித்து விதுரர் விடைபெற்றார்.

விதுரர் கூறிய அனைத்தையும் கேட்ட திருதராஷ்டிரன் கவலையில் ஆழ்ந்தான். மைந்தான் மகாபாவியாகி விட்டான். தன்னுடைய போக்கை நல்வழிக்கு மாற்றிக்கொள்ள வேண்டும் என்று திருதராஷ்டிரன் இடையிடையே உணர்ந்தான். ஆனால் அவன் உள்ளத்தில் ஊறிக்கிடந்த சிற்றியல்பு அதற்கு இடம் தரவில்லை. மற்றொரு பக்கம் புத்திர வாஞ்சையும் பொல்லாங்கிலேயே அவனை எடுத்துச் சென்றது.

காலையில் சஞ்சயன் கௌரவர்களுடைய சபா மண்டபத்திற்கு வந்து சேர்ந்தான். பாண்டவர்கள் எப்படி சமாதானம் பண்ணிக் கொள்வதற்கு ஆயத்தமாய் இருக்கின்றார்களோ அதே போல் அவர்கள் போர் செய்வதற்கும் ஆயத்தமாக இருக்கிறார்கள் என்று சஞ்சயன் கூறியது கௌரவர்களை விவாதத்தில் இழுத்துச் சென்றது. அப்போது அவர்களுக்கு இடையில் கருத்து வேற்றுமை வளர்ந்தது.

பீஷ்மர் திருதராஷ்டிரனிடம் கூறினார். அர்ஜுனனும் கிருஷ்ணரும் பழங்காலத்து நரன் நாராயணாகிய ரிஷிகள். அவர்கள் இப்பொழுது மனித ரூபத்தில் தோன்றி வந்திருக்கின்றனர். மண்ணுலகத்தில் உள்ள அக்கிரமங்களை ஒழிப்பதற்கும் நேர்மையை நிலைநாட்டுவதற்கும் அவர்கள் வந்திருக்கிறார்கள். போர் புரிய அவர்கள் தீர்மானித்தால் அவருடைய எதிரிகள் அனைவரும் துடைத்துத் தள்ளப்படுவார்கள். ஆகையினால் அவர்களோடு நாம் சமாதானம் பண்ணிக் கொள்வது சரியானதாக இருக்கும் என்று பீஷ்மர் கூறினார். அதைக் கேட்ட கர்ணன் இந்த முதியவர் மிகவும் படுபாவி. இவருடைய உடல் நம்மோடும் அவருடைய உள்ளம் நம்முடைய எதிரிகளிடமும் இருக்கிறது. நம்முடைய எதிரிகளை போற்றுவதும் நம்மை தூற்றுவதும் இவருடைய தொழிலாகும் என்றான் கர்ணன்.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!