மகாபாரதம் | 5 உத்தியோக பருவம் | பகுதி - 9
பாண்டவர்களும் கிருஷ்ணனும் பேசுவதைக்கேட்ட திரௌபதி கிருஷ்ணனை தனியாக சந்தித்து தேம்பித் தேம்பி அழுதாள். அஸ்தினாபுரத்தில் சபை நடுவே தான் பட்ட அவமானத்தையும் அல்லல்களையும் கிருஷ்ணனுக்கு அவள் ஞாபகம் மூட்டினாள். பரிதாபகரமான காட்சியை பார்த்த கிருஷ்ணன் திரௌபதியிடம் சமாதானத்தை நாடி நான் அஸ்தினாபுரம் போகிறேன். ஆனால் துரியோதனன் அதற்கு சம்மதம் கொடுக்க மாட்டான். போராட்டத்தில் தான் அவன் நம்மை இணைத்து வைக்கப்போகிறான். அதன் விளைவாக உனக்கு நிகழ்ந்த மானபங்கத்துக்கு பொருத்தமான ஈடு வந்து சேரும் என்று கூறினான். கிருஷ்ணன் பேச்சைக் கேட்ட திரௌபதி மன ஆறுதல் அடைந்தாள்.

பாண்டவர்களிடம் விடைபெற்று சாத்யகியை தன்னோடு அழைத்துக்கொண்டு கிருஷ்ணன் அஸ்தினாபுரம் புறப்பட்டுப் போனான். கிருஷ்ணருடைய வருகையைப் பற்றி கேள்விப்பட்ட திருதராஷ்டிர மன்னன் அவனுக்கேற்ற மேன்மைமிக்க வரவேற்பை அளிக்கவேண்டும் என்று ஆணையிட்டான். கிருஷ்ணருடைய மேன்மையை பாராட்டும் விதத்தில் துரியோதனன் ஆங்காங்கு ராஜரீதியான கொட்டைகளையும் வரவேற்பு பந்தல்களையும் அமைத்து வைத்தான். ஆனால் கிருஷ்ணனோ எந்த ஆடம்பர ஏற்பாடுகளையும் கவனிக்காமல் தன் போக்கில் பயணம் சென்றார். அத்தகைய ஆடம்பரங்களுக்கு கிருஷ்ணன் கட்டுப்பட மாட்டான் என்றும் பாண்டவர்களுக்கு கௌரவர்கள் செய்துள்ள பாதங்களுக்கு நிவர்த்தி தேடுவதே கிருஷ்ணனுடைய வருகையின் நோக்கமாக இருக்கிறது. அதைப் புறக்கணித்து விட்டு பண்ணுகின்ற எந்த ஒரு செயலும் கிருஷ்ணனை திருப்திப்படுத்தாது என்று துரியோதனனுக்கு விதுரன் எடுத்து விளக்கினார்.

கிருஷ்ணனை பிடித்து கைதியாக அடைத்து வைத்து விடலாம் என்று துரியோதனன் சதி ஆலோசனை பண்ணினான். ஆனால் முதியவர்கள் அதற்கு சம்மதம் கொடுக்கவில்லை. சமாதானம் பேச வருகின்றவரை இவ்வாறு கையாளுதல் முற்றிலும் பொருத்தமற்றது என்று துரியோதனனின் செயலுக்கு தடை போட்டார்கள். கிருஷ்ணன் அஸ்தினாபுரத்தை வந்தடைந்த பொழுது பொது மக்கள் பலமான வரவேற்பு அளித்தனர். வந்தவன் முதலில் திருதராஷ்டிர மன்னனுடைய மாளிகைக்குப் போய் அவனுக்கு வணக்கம் செலுத்தினர். அடுத்தபடியாக விதுரருடைய வீட்டிற்குச் சென்றான் அங்கு வசித்து வந்த குந்திதேவி கிருஷ்ணரை பார்த்ததும் தாரைதாரையாக கண்ணீர் சிந்தி வரவேற்றாள். வனவாசத்தில் தன் புதல்வர்கள் அனுபவித்த கஷ்ட திசையை அவள் கண்ணீர் சிந்துவதற்கு காரணமாக இருந்தது. அவளுடைய புதல்வர்களுக்கு அதிவிரைவில் நல்ல காலம் வரும் என்றும் தான் எப்போதும் துணை இருப்பதாகவும் கிருஷ்ணன் அவளுக்கு ஆறுதல் அளித்து அங்கிருந்து கிளம்பினான்..

கிருஷ்ணர் துரியோதனன் இருப்பிடத்திற்கு சென்று நலம் விசாரித்தான். துரியோதனன் கிருஷ்ணனை தன் மாளிகைக்கு விருந்துக்கு வரவேண்டும் என்று அழைத்தான். ஆனால் கிருஷ்ணனோ அதற்கு சம்மதம் கொடுக்கவில்லை. தூதனாக வந்த ஒருவன் வந்த காரியம் வெற்றிகரமாக நிறைவேறுவதற்கு முன்பு எதிரிகளிடமிருந்து உணவு ஏற்றுக் கொள்ளல் ஆகாது என்று தெரிவித்தார்.