மகாபாரதம் | 6 பீஷ்ம பருவம் | பகுதி - 13
ஒன்பதாம் நாள் யுத்தம் துவங்கியது. பீஷ்மர் சர்வதோபத்ர வியூகம் வகுத்தார். திருஷ்டத்துய்மன் அதற்கேற்ப திரிசூல வியூகம் வகுத்தான். திரிசூலத்தின் மும்முனைகளிலும் பாண்டவர்களின் சிறந்த வீரர்களான அர்ஜுனன் திருஷ்டத்துய்மன் பீமன் என்று முறையே நின்றனர். நகுல சகாதேவ சகோதரர்கள் பின்புற சுவராக நின்றனர். திருஷ்டத்துய்மனால் மிகவும் நேர்த்தியாக அமைக்கப்பட்ட வியூகம். பீஷ்மருக்கு எதிராக சரியான நேரத்தில் சரியான நபர்களுடன் அமைக்கப்பட்டது. திருஷ்டத்துய்மன் போர் வியூகம் வகுப்பதில் பீஷ்மருக்கு இணையானவன் என்பதை நிரூபித்தான். அர்ஜுனன் இருக்கும் போது திருஷ்டத்துய்மனை படை தளபதியாக கிருஷ்ணர் அறிவித்ததின் காரணத்தை யுதிஷ்டிரர் இப்போது அறிந்தார்.

அபிமன்யுவிற்கும் அலம்பசனுக்கும் பெரும்போர் நடந்தது. மாயாவியான அலம்பசனின் அணைத்து மாயங்களும் அபிமன்யுவிடம் தோற்றது. அவனோ மாயப்போர் புரிந்தான். எங்கும் இருள் சூழும்படி அம்பு மழை பொழிந்தான். அபிமன்யூ மாயத்தை மறைக்கும் மாற்றுப் படையால் மாயையை விலக்கி அலம்புசனைத் தாக்கினான். அலம்புசன் போர்க்களம் விட்டு ஓடினான். அன்றைய போரில் அபிமன்யு துரியோதனன் சகோதரர்களில் மூவரை கொன்று அர்ஜுனனின் பிம்பமாகவே காட்சியளித்தான்.

துரோணர் அர்ஜூனனை எதிர்த்தார். குருவும் சீடன் என எண்ணவில்லை சீடனும் குரு என எண்ணவில்லை. துரோணரின் அம்புகள் அனைத்திற்கும் தன் வில்லால் பதில் அளித்தான் அர்ஜுனன். ஆனாலும் அவன் கவனம் முழுவதும் பீஷ்மரை வெற்றி கொள்வதில் மட்டுமே இருந்தது. பின்பு பாண்டவர்கள் ஒன்று கூடிப் பீஷ்மரை எதிர்த்தனர். பீஷ்மரை அசைக்க முடியவில்லை. அன்று பாண்டவர்கள் படையில் கடும் சேதத்தை பீஷ்மர் விளைவித்தார். கௌரவர்கள் அனைவரும் அழிந்தாலும் பீஷ்மர் ஒருவர் மட்டும் அவர்களை வெற்றி பெற செய்துவிடுவார் என்பதை பாண்டவர்கள் உணர்ந்தனர். சூரியன் மறைய ஒன்பதாம் நாள் யுத்தம் முடிவுக்கு வந்தது.

அன்று இரவு கிருஷ்ணரும் பாண்டவர்களும் சபையில் கூடி யுத்தத்தின் நிலைமையை விமர்சனம் பண்ணினார்கள் தொடர்ந்து 9 நாட்கள் யுத்தம் முடிந்தது. இரு பக்கங்களிலும் எண்ணிக்கையில் அடங்காத போர்வீரர்கள் மடிந்து போய்விட்டார்கள். இதற்கு பலன் எதுவும் கிடைக்கவில்லை. பீஷ்மரை வென்றால் மட்டுமே இந்த யுத்தம் முடிவுக்கு வரும். ஆயுதத்துடன் இருக்கும் அவரை அழிக்க கிருஷ்ணனுக்கு மட்டுமே சாத்தியம். கிருஷ்ணர் ஆயுதம் தொடமாட்டேன் என்ற வாக்குப்படி அது சாத்தியம் இல்லை. பீஷ்மரை தோற்கடிக்க அர்ஜூனன் உறுதி பூண்டிருந்தான். ஆயுதத்துடன் இருக்கும் பீஷ்மரை தோற்கடிக்கும் வழி அர்ஜூனனுக்கு தெரியவில்லை. பாண்டவர்கள் கிருஷ்ணரை வணங்கி. இதுவரை நடைபெற்ற போரில் பீஷ்மரை வெல்ல முடியவில்லையே என்ற கவலையை வெளியிட்டனர். நீண்ட யோசனைக்குப் பின் அவரை வெல்வது குறித்து பீஷ்மரையே கேட்க முடிவெடுத்தனர்.

பீஷ்மர் இருக்குமிடம் அனைவரும் சென்று வணங்கினர். கிருஷ்ணரை பீஷ்மர் பக்திபூர்வமாக வரவேற்றார். பீஷ்மர் பாண்டவர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்று தழுவிக் கொண்டார். பின் அர்ஜூனன் பிதாமகரே போர் தொடக்கத்திற்கு முன் எங்களுக்கு வெற்றி கிடைக்கட்டும் என வாழ்த்தினீர்கள். தங்களை வென்றால்தானே எங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்பதை உணர்ந்து கொண்டோம். தங்களைத் தோற்கடிப்பது எப்படி என்று கேட்டான்.