அர்ஜூனன் தனது மனதை ஒருமுகப்படுத்தி தைரியத்தை வரவழைத்து தன் முழு பலத்தோடும் ஆற்றலோடும் அம்பை செலுத்தினான். அம்பு காற்றை கிழித்து கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் பீஷ்மரின் கவசத்தைப் பிளந்தது. வாழ்த்துக்கள் அர்ஜுனா உன்னிடம் தோற்பதில் பெருமை அடைகிறேன் என்று போர்க்களம் முழுவதும் கேட்க்குமாறு வாழ்த்தினார் பீஷ்மர். அடுத்த அம்பும் சீறியது. பீஷ்மரின் நெஞ்சு கூட்டை பதம் பார்த்தது. அடுத்தது ஏழு அம்புகள் பீஷ்மரின் மார்பில் பாய்ந்தது. அர்ஜுனன் ஏககாலத்தில் பீஷ்மர் மீது அம்பு மழை பொழிந்தான். அர்ஜூனனின் அம்புகள் பீஷ்மரின் உடலெங்கும் தைத்தன. பீஷ்மர் நிலை குலைந்தார். மாவீரரான பீஷ்மரின் உடல் அர்ஜுனனின் அம்புகளால் துளைக்கப்படுவதை கண்டு துரியோதனன் திகைத்து நின்றான். தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தேரிலிருந்து பீஷ்மர் சாய்ந்த போது மலர் மழை பொழிந்தனர்.
கிருஷ்ணனும் அர்ஜுனனும் தவிர வேறு எந்த போர் வீரனாலும் தன் மீது பாணம் செய்ய இயலாது என்று துச்சாதனனிடம் பீஷ்மர் ஏற்கனவே சொல்லி இருந்தார். அவர் சொல்லியபடியே இப்பொழுது நடந்தது. இதை பார்த்த இருகட்சி போர் வீரர்களும் திகைத்துப் போயினர். சிறிது நேரம் யுத்தம் நின்று போனது. பரசுராமரை தோற்கடித்த பீஷ்மர் இப்போது அர்ஜுனன் கையில் தோல்வியடைந்து வீழ்ந்தார். ஆனால் மடிந்து போகவில்லை. சூரியனின் தட்சிணாயண காலம் முடிய சில நாட்கள் பாக்கி இருந்தது. பிறகு சூரியனுடைய உத்தராயண புண்ணிய காலம் துவங்கும். அதுவரையில் உயிரை பிடித்து வைத்திருக்க பீஷ்மர் தீர்மானித்தார். நினைக்கும் போது மரணம் என்னும் இச்சாமிருத்யு என்னும் வரத்தை பீஷ்மர் தன் தந்தையாகிய சாந்தனு மன்னனிடமிருந்து பெற்றிருந்தார். அந்த வரத்தின் படி அவர் அனுமதித்தால் ஒழிய அவரையும் மரணம் அணுகாது. அந்த வரத்தை அவர் இப்போது பயன்படுத்திக்கொண்டார்.
சிவனிடம் வரம் பெற்று பீஷ்மரின் மரணத்திற்கு நானே காரணமாக இருப்பேன் என்று கடந்த பிறவியில் அம்பையாக சபதம் செய்த சிகண்டியின் சபதம் நிறைவேறியது. கீழே வீழ்ந்த பீஷ்மரின் உடல் தரையில் படவில்லை. உடம்பில் தைத்திருந்த அம்புகள் உடல் பூமியில் படாது தடுத்தன. அவர் உடல் பூமியில் படவில்லை என்பதால் தலை தொங்கி கொண்டிருந்தது. அருகில் இருந்தோர் தலயணைக் கொண்டு வந்தனர். ஆனால் அவற்றை விரும்பாத பீஷ்மர் அர்ஜூனனைப் பார்த்தார். புரிந்து கொண்ட அர்ஜூனன் மூன்று அம்புகளை வில்லில் பொருத்தி வானத்தில் செலுத்தினான். அவை நுனிப்பகுதி மேலாகவும் கூர்மையான பகுதி தரையில் பொருந்துமாறும் பூமிக்குள் புதைந்து நின்றன. அத்தகைய அமைப்பு பீஷ்மரின் தலைக்கு பொருத்தமான தலயணையாக அமைந்தன. பீஷ்மர் புன்னகை பூத்தார். கடும் போர் புரிந்த பீஷ்மருக்கு தாகம் எடுத்தது. தனக்கு நீர் வேண்டும் என கேட்டார். பல மன்னர்கள் தண்ணீர் கொண்டு வந்தனர். ஆனால் பீஷ்மர் மறுத்து விட்டார். மீண்டும் ஒரு முறை அர்ஜூனனை நோக்கினார். குறிப்புணர்ந்த அர்ஜூனன் அம்பு ஒன்றை பூமியில் செலுத்தினான். தன் தாயாகிய கங்கா தேவியின் அருளால் கங்கை மேலே பீரிட்டு வந்தது. கங்கை மைந்தன் அந்த நீரைப் பருகினார்.