மகாபாரதம் | 6 பீஷ்ம பருவம் | பகுதி - 9
ஐந்தாம் நாள் யுத்தம் தொடங்கியது. பீஷ்மர் தனது சேனையை மகர வியூகத்தில் அமைத்தார். வியூகம் வடிவத்தில் முதலை போன்று இருந்தது. அதை எதிர்த்து திருஷ்டத்யும்னன் தனது சேனேயை சியேன வியூகத்தில் அமைத்தான். வியூகம் வடிவத்தில் பருந்து போன்று இருந்தது. அன்றைக்கு நிகழ்ந்த யுத்தத்திற்கு சங்குல யுத்தம் என்று பெயர். அத்தனை பேரும் அவனவனுக்கு ஏற்ற எதிரியைத் தாக்கி போர் புரிவது சங்குல யுத்தம் ஆகும். யுத்தம் ஆரம்பிக்கும் போது துரியோதனன் துரோணரைப் பார்த்து குருவே நீங்கள் பாண்டவர்களைக் கொல்லும் செயலில் ஈடுபடுங்கள். உம்மையும் பீஷ்மரையுமே நான் நம்பியுள்ளேன் என்றான். அதற்கு துரோணர் பாண்டவரிடம் பகை வேண்டாம் என ஏற்கனவே பலமுறை சொல்லியும் நீ கேட்கவில்லை. ஆயினும் என்னால் இயன்ற அளவு போரிடுவேன் என்றார்.

அர்ஜுனன் ஆயிரக்கணக்கான வீரர்களை வீழ்த்தினார் அவனை எதிர்த்து பயந்தவர்கள் சுடர்விட்டு எரியும் தீயில் பாய்ந்து விட்டில் பூச்சிகள் போன்று மடிந்தார்கள். யுத்தத்தில் பல ஆயிரம் பேர் மாண்டனர். சாத்யகியும் பீமனும் துரோணருடன் சண்டையிட அர்ஜூனன் அஸ்வத்தாமனுடன் போரிட்டான். அபிமன்யூ துரியோதனனின் மகன் லட்சுமணனுடன் போரிட்டான். சூரியன் மறைய அன்றைய போர் முடிந்தது. பாண்டவ மற்றும் கௌரவர்களின் சகோதர இழப்பின்றி யுத்தம் முடிந்தது.

ஆறாம் நாள் போரில் திருஷ்டத்துய்மன் னது சேனையை மகர வியூகத்தில் அமைத்தான். பீஷ்மர் கிரௌஞ்ச வியூகத்தில் அமைத்தார். ஒருவருடன் ஒருவர் போர் புரிந்தனர். பீமன் அன்று சிறப்பாக போரிட்டான். பகைவர்களைக் கொன்று குவித்தான். யானை படைகள் இவன் ஆற்றல் கண்டு மிரண்டது. குதிரை படைகள் தெறித்து ஓடின. பீமன் தன் கையில் இருக்கும் கதாயுதத்தை சுழற்றும் வேகமும் அதில் இருந்து எழுந்த ஓசையும் பலராமனின் சீடன் என்பதை நிருபித்தான். பீமனின் கதாயுதம் இவ்வொரு முறை நிலத்தில் மோதும் போதும் நிலம் அதிர்ந்தது. இதை கண்ட கௌரவ படைகள் அச்சத்தின் உச்சியில் இருந்தனர். அவன் ஆற்றலும் போர் வெறியும் அன்று எல்லை அற்று இருந்தது. பீமனை பார்த்த பீஷ்மர், துரோணர், கிருபர் அனைவரும் இப்படியும் ஒருவர் போர் செய்ய முடியுமா என்று மனதிற்குள் பீமனை பற்றி பெருமை கொண்டனர். துரோணர் இவன் என் சிஷ்யன் என்று கூற அதற்க்கு பீஷ்மர் அவன் என் பேரன் என்று பெருமை கொண்டார். இடையில் கிருபரோ உங்கள் அனைவருக்கும் முன்பு நான் தான் குல குரு ஆதலால் அந்த பெருமை என்னை சேரும் என்று போர்களத்தில் கூற மூவரும் நகைத்து கொண்டனர். பின்பு அவனும் தங்கள் எதிர் அணியில் ஒருவன் என்பதை உணர்ந்து மீண்டும் ஆயுதம் ஏந்தி போரினை தொடர்ந்தார்கள்.

துரியோதனன் பீமனுடன் போர் புரிய நெருங்கினான். அதைக் கண்ட பீமன் துரியோதனா நீ இங்குத்தான் இருக்கிறாயா உன்னைப் போர்க்களம் எங்கும் தேடி அலைந்தேன். இன்றுடன் உன் வாழ்வு முடிந்தது என்று கூறி அவன் தேர்க்கொடியை அறுத்துத் தள்ளினான். இருவருக்கும் பெரும் போர் மூண்டது. இருவரும் தங்களின் கதாயுதத்தால் சண்டை போட்டனர். கதாயுதங்களின் சத்தம் இடியன ஒலித்தது. இருவரின் கதாயுதங்களில் இருந்து வந்த நெருப்பு பொறிகள் பகலில் மின்னல் போல் தெரித்தது.