மகாபாரதம் | 7 துரோண பருவம் | பகுதி - 1
பத்தாம் நாள் போரில் பீஷ்மரின் வீழ்ச்சி கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் போரில் பங்கு கொண்ட அணைத்து வீரர்களுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. போர் வீரர்கள் அனைவரும் கர்ணன் சேனாதிபதியாவான் என்று எண்ணினர். ஆனால் கர்ணன் துரியோதனனுக்கு வேறு ஒரு ஆலோசனை கூறினார். துரோணாச்சாரியார் அனைத்து வேந்தர்களுக்கும் ஆச்சார்யாராக இருந்தவர். துரோணாச்சாரியரை சேனாதிபதியாக ஆக்கினால் வேந்தர்களுக்கு திருப்தி உண்டாகும். அனைத்து அரசர்களுக்குள் ஒருவரை மட்டும் சேனாதிபதியாக நியமித்தால் அது அவர்களுக்குள் அதிருப்தியை உண்டாக்கும். கர்ணன் இவ்வாறு கூறியது துரியோதனனுக்கு பெரும் திருப்தியை உண்டு பண்ணியது.

சேனாதிபதி பதவியை ஏற்றுக் கொள்ளும்படி துரோணரை துரியோதனன் கேட்டுக்கொண்டான். துரோணர் மிகவும் மகிழ்வுடன் சம்மதம் கொடுத்தார். தம்மை சேனாதிபதி ஆக்கியதன் மூலம் தமக்கு கிடைத்த வாய்ப்பை முன்னிட்டு துரோணர் பெருமகிழ்வு அடைந்தார். அதற்கு அறிகுறியாக தம்மிடம் ஏதாவது வரம் கேட்டு பெற்றுக்கொள்ளும்படி துரியோதனிடம் அவர் கூறினார். அதற்கு துரியோதனன் சூரியன் மறைவதற்கு முன்பு யுதிஷ்டிரனை கைதியாக பிடித்து தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் இதுவே தனக்கு வேண்டும் வரம் என்றும் கேட்டான். இதனை நிறைவேற்றுவது மிகவும் கடினம் என்று துரோணர் உணர்ந்தார். ஆயினும் அரைமனதுடன் சம்மதம் தெரிவித்தார்.

யுதிஷ்டிரரை உயிருடன் பிடித்து விட்டால் அவரை மீண்டும் சூதாட வைத்து தோற்கடித்து ஆயுட்காலம் முழுதும் வனவாசம் அனுப்பி விடலாம் என்று திட்டமிட்டான் துரியோதனன். சகுனியின் சூழ்ச்சி பின் இருந்தது. இந்த செய்தி ஒற்றர்கள் மூலம் பாண்டவர்களுக்கு எட்டியது. திருஷ்டத்துய்மன் அதை தடுக்க தன்னால் இயன்றதை செய்வேன் என்று சூளுரைத்து வியூகம் வகுத்தான். அதனால் யுதிஷ்டிரருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. அன்று துரோணர் சகட வியூகம் வகுத்தார். வண்டி போன்ற வடிவம் என்பது அதன் பொருள். பாண்டவர்கள் கிரௌஞ்ச வியூகம் வகுத்தனர்.

பீஷ்மர் இல்லாத நிலையில் கர்ணனை போர் செய்ய அனுமதிக்குமாறு துரோணரை வேண்டினான் துரியோதனன். துரோணரும் சம்மதம் தெரிவித்தார். செய்தி கர்ணனின் பாசறைக்கு சென்றது. துரியோதனா உனக்கு நன்றி செலுத்தும் நேரம் இது வருகிறேன் அர்ஜுனா என்று கர்ஜித்தான் கர்ணன். கௌரவ படைகள் முகத்தில் நம்பிக்கை ரேகை பரவியது. கர்ணன் தன் தந்தையாகிய சூரியனுக்கு வணக்கங்களையும் நட்பின் கடன் தீர்க்க வாய்ப்பை கொடுத்ததற்கு நன்றியையும் செலுத்திவிட்டு தன் ரத்தத்தில் ஏறி போர்க்களம் நோக்கி புறப்பட்டான். ஆயிரம் சூரியனின் பிரகாசம் கொண்டவனாய் காட்சியளித்தான். ஆகாயத்தை விட தெளிவான சிந்தனையுடன் போர்களத்தை கவனித்தான். நீரை போல் சுழன்று தன்னை எதிர்த்தவர்கள் அனைவரையும் அழித்தான். அவனது குறிக்கோள் ஒன்று மட்டுமே. அது துரியோதனனை அஸ்தினாபுரத்து அரியாசனத்தில் அமர வைத்து அர்ஜுனனை விட தான் சிறந்தவன் என்பதை இந்த உலகிற்கு காட்ட வேண்டும் என்ற நெருப்பு அவனுள் எரிந்து கொண்டே இருந்தது.