மகாபாரதம் | 7 துரோண பருவம் | பகுதி - 11
அர்ஜுனன் கண்களில் தூரத்தில் குன்றின் மீது நின்று கொண்டிருந்த ஜயத்ரதன் தென்பட்டான். அர்ஜுனா அதோ ஜயத்ரதன் நாணேற்றிய அஸ்திரத்தை விடுத்து அவன் தலையைக் கொய்து வனத்திலே தவம் செய்து கொண்டிருக்கும் அவன் தந்தை விருத்தக்ஷத்ரன் என்ற மடியில் விழச் செய் என்று ஆணையிட்டார் கிருஷ்ணர். கண்ணிமைக்கும் நேரத்தில் காண்டீபத்திலிருந்து கணை புறப்பட்டது. அது ஜயத்ரதன் தலையைக் கொய்து விண்ணிலே தூக்கிச் சென்று வனத்தில் தவம் செய்துகொண்டிருந்த விருத்தக்ஷத்ரன் மடியில் போட்டது. தன் தவத்தை யாரோ கலைப்பதாக எண்ணி மடியில் விழுந்த தலையைத் தரையில் தள்ளினான் விருத்தக்ஷத்ரன். உடனே விருத்தக்ஷத்ரனின் தலை சுக்குநூறாக வெடித்தது.

ஜயத்ரதனுடைய தந்தை விருத்தக்ஷத்ரன் சிந்து ராஜ்யத்தின் அரசன். தன் மைந்தன் ஜயத்ரதன் திறம் வாய்க்கப் பெற்றவனாக வடிவெடுத்த பொழுது ராஜ்யத்தை அவனிடம் ஒப்படைத்து விட்டு தவ வாழ்க்கையில் ஈடுபட்டான். தன்னுடைய தவப்புதல்வன் ஜயத்ரதன் பற்றிய உண்மை ஒன்றை ஞானதிருஷ்டியில் கண்டார். உலக பிரசித்தி பெற்ற போர்வீரன் ஒருவன் ஜயத்ரதனை கொல்வான் என்பது அவர் பெற்ற ஞானக்காட்சி. அதை அறிய வந்த விருத்தக்ஷத்ரன் இறைவனிடம் தவம் புரிந்து தன் மகன் ஜயத்ரதன் தலையை எவன் தரையில் விழச் செய்கிறானோ அவன் தலை சுக்குநூறாக வெடிக்க வேண்டும் என்று வரம் பெற்றிருந்தான் விருத்தக்ஷத்ரன். அவன் பெற்ற வரமே அவனை அழித்துவிட்டது.

விருத்தக்ஷத்ரன் பெற்ற வரத்தை பற்றிய ரகசியத்தை கிருஷ்ணன் ஒருவரே அறிந்திருந்தார். அர்ஜுனனை காப்பாற்றும் பொறுப்பை கிருஷ்ணன் ஏற்றிருக்கின்றார். ஆகையால் அர்ஜுனன் உயிர் பிழைத்தான். பாண்டவர்களின் கண்கள் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தன. கிருஷ்ணரை அர்ஜுனன் நெஞ்சாரத் தழுவிக்கொண்டான். சபதத்தை முடித்தான் அர்ஜுனன். சூரியன் மறைய பதினான்காம் நாள் பகல் பொழுது யுத்தம் முடிவுக்கு வந்தது. பதினான்காம் நாள் இரவும் யுத்தம் தொடர்ந்தது.

துரியோதனனோ பெரும் கவலை அடைந்தான். இதுவரை அர்ஜுனனை ஒரு சாமானிய வில்லாளி என்றே எண்ணி வந்தான் துரியோதனன். இப்பொழுது அவனுடைய பராக்கிரமத்தை பார்த்த பிறகு தன் அபிப்பிராயத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு துரியோதனன் வந்தான். அன்று நடந்த போரில் கௌரவர்களின் முக்கியமான வீரர்களில் ஒருவனான ஜயத்ரதனை இழந்தான். மாவீரன் பூரிசிரவஸ் என்பவனையும் இழந்தான். மேலும் பல தம்பியர்களை இழந்திருந்தான். அவனின் மன வலிமை சற்றே தளர்ந்து இருந்தது. எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்று யோசித்து கொண்டிருந்தான். யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. போர்களத்தின் காட்சிகள் அவன் கண் முன் ஓடியது. தம்பியர்களின் மரண ஓலங்கள் மீண்டும் மீண்டும் ஒலித்தது. இருப்பினும் ராஜ்ஜியத்தை விட்டு கொடுக்க அவனுக்கு மனம் வரவில்லை.