மகாபாரதம் | 7 துரோண பருவம் | பகுதி - 16

மகாபாரதம் | 7 துரோண பருவம் | பகுதி - 16
ரிஷிபுங்கவர்கள் கும்பலாக நிலவுலகிற்கு இறங்கி வந்து துரோணரிடம் ஆச்சாரியாரே உங்களுடைய நில உலக வாழ்வு ஏற்கனவே பூர்த்தியாயிற்று. நீங்கள் யுத்தத்தில் மூழ்கி இருப்பதால் இங்கேயே தொடர்ந்து தங்கி இருக்கிறீர்கள். இப்போராட்டத்தை ஏதேனும் ஒரு போக்கில் முடித்துவிட்டு விண்ணுலகிற்கு திரும்பி வாருங்கள் என்று அழைத்தார்கள். துரோணருக்கு உடனே திரும்ப வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை. இன்னும் சிறிது தங்கியிருந்து பாண்டவ படைகள் அனைத்தையும் அழிக்க நினைத்தார். அப்பொழுது துரோணரின் முன்னிலையில் பீமன் வந்து துரோணரை சரமாரியாக திட்ட ஆரம்பித்தான். மண்ணுலகில் இருக்கும் பிராமணர்களில் நீங்கள் மோசமானவர். பிரம்மத்தையே நாடி இருப்பது பிராமண தர்மம். ஆனால் நீங்களோ க்ஷீத்திரிய போராட்டத்தில் புகுந்து இருக்கின்றீர்கள். பொருளாசையினால் தூண்டப் பெற்றவகளுடன் சேர்ந்து கொண்டு கசாப்புக் கடைக்காரன் போன்று நீங்கள் உயிரை அழித்துக் கொண்டிருக்கின்றீர்கள் என்று திட்டினான். ஒரு பக்கம் ரிஷிபுங்கவர்கள் விண்ணுலகிற்கு அழைக்க பீமனோ அவரை ஒரு பக்கம் அவமானப்படுத்தினான். ஆனால் அவர் இரண்டு வித கூற்றுக்களையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் படைகளை அழித்து தள்ளுவதில் தீவிரமாக இருந்தார்.

துரோணர் தன் அஸ்திரங்களால் பல போர் வீரர்களை கொன்று குவித்து கொண்டிருந்தார். ஆயிரக்கணக்கான குதிரைகளையும் வீரர்களையும் யானைகளையும் கொன்று குவித்தார். ரத்த வெள்ளம் பெருக்கெடுத்தது. போர்க்களம் ரத்தக் கடல் போல் காட்சியளித்தது. இறுதியில் பிரம்மாஸ்திரத்தை உபயோகப்படுத்த திட்டமிட்டிருந்தார் துரோணர். இத்திட்டத்தின்படி பிரம்மாஸ்திரம் பாண்டவர்கள் படைகள் அனைத்தையும் அழிந்துவிடும். இதனை அறிந்த கிருஷ்ணன் அன்று மதியமே துரோணர் போரை முடித்து விடுவார் என்று எண்ணினார். துரோணரின் போர் உக்கிரத்தைக் கண்டு கிருஷ்ணன் ஆழ்ந்து சிந்தித்தார். அறநெறிப்படி துரோணரை வெல்ல முடியாது என உணர்ந்தார். ஏதேனும் சொல்லித் துரோணரின் கவனத்தைத் திருப்பினாலன்றி வெற்றி கிடைக்காது என எண்ணினார்.

யுத்தகளத்தில் பீமன் கௌரவர்களின் படையில் இருந்த அஸ்வத்தாமன் என்ற புகழ் பெற்ற யானையைக் கதாயுதத்தால் கடுமையாக தாக்கினான். அது சுருண்டு விழுந்து அந்த இடத்திலேயே இறந்து போனது. அஸ்வத்தாமனை கொன்று விட்டேன் என்று பீமன் கத்தினான். இச்செய்தி துரோணரின் காதுகளில் விழுந்தது. தன் மகன் அஸ்வத்தாமனை பீமன் கொன்று விட்டான் என்று எண்ணி உடனே ஸ்தப்பித்து நின்றார். அஸ்வத்தாமன் சிரஞ்சீவி என்பதை மறந்தார். புத்திர சோகத்தால் தன் நிலை இழந்தார். தன்னுள் இருந்த போர் வெறி இறங்கியது. சகஜமான மன நிலைக்கு வந்தார். மனம் கனத்தது. கண்கள் இருண்டன. கையில் இருந்த வில்லை கீழே எறிந்தார். போர்களத்தை சுற்றி பார்வை இட்டார். தான் செய்த கொலைகளையும் அதனால் பெருக்கெடுத்த ரத்த வெள்ளத்தையும் பார்த்தார். போர் வெறியில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் செய்ததை எண்ணி அதிர்ந்தார். தூரத்தில் இவரை கொல்வதற்காகவே பிறப்பெடுத்த திருட்டத்துயும்ணன் தன்னை நோக்கி வருவதை கண்டார். மீண்டும் ஆயுதங்களை எடுக்க அவரால் முடியவில்லை. இனி போரிட்டு என்ன செய்ய போகிறோம் என்று எண்ணினார். எக்காரணத்தை முன்னிட்டும் யுதிஷ்டிரனுடைய நாவிலிருந்து பொய்மொழி வராது. கடைசியாக ஒரு முறை யுதிஷ்டிரரிடம் சென்று அஸ்வத்தாமனின் மரணம் உண்மையா என்று கேட்டு ஊர்ஜிதம் செய்யலாம் என்று யுதிஷ்டிரரை நோக்கி சென்றார்.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!