மகாபாரதம் | 7 துரோண பருவம் | பகுதி - 18
பாண்டவர்களை நோக்கி அஸ்வத்தாமன் போர்க்களத்திற்கு வந்ததும் எடுத்த எடுப்பிலேயே ஒப்புயர்வற்ற நாராயண அஸ்திரத்தை பிரயோகித்தான். அஸ்திரம் தனது திறமையை காட்ட துவங்கியது. எதிரிகள் எத்தனை பேர் இருந்தார்களோ அத்தனை அஸ்திரங்களாக அது பிரிந்து கொண்டது. ஒவ்வொரு அஸ்திரமும் அதற்கு இலக்காய் இருந்த எதிரியின் வலிமைக்கு ஏற்றவாறு வலிமை பெற்று தாக்க வந்தது. சிறிது நேரத்தில் பாண்டவர்கள் அனைவரும் அழிவது உறுதி என்ற நிலை இருந்தது. கிருஷ்ணன் ஒருவனே அஸ்திரத்தின் ரகசியத்தை அறிந்தவானக இருந்தான்.

பாண்டவர்கள் பக்கம் இருந்த அனைவரும் அவரவர் ஆயுதங்களைக் கீழே வைக்கும்படி கிருஷ்ணன் உத்தரவிட்டான். அத்தனை பேரும் அவன் சொன்னபடியே நடந்துகொண்டனர். அடுத்தபடியாக அத்தனை பேரும் தரையில் விழுந்து வணங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தான். அந்த உத்தரவுப்படியே அனைவரும் தரையில் வீழ்ந்து பக்திபூர்வமாக வணங்கினர். நாராயண அஸ்திரத்தில் இருந்து வந்த அத்தனை அஸ்திரங்களும் செயலற்று வானத்தில் மிதந்தது. பீமன் ஒருவன் மட்டுமே கிருஷ்ணனுடைய ஆணைக்கு அடிபணியவில்லை. ஆயுதம் தாங்கிய அவன் நிமிர்ந்து நின்றான். நாராயண அஸ்திரத்தை கடைசிவரை ஒரு கை பார்க்கவேண்டும் என்று தீர்மானித்தான். நாராயண அஸ்திரம் தனது செயலை செய்ய ஆயத்தமாக வந்தது. அஸ்திரத்தின் ஒரு துளியே பீமனை அழிக்க போதுமானதாக இருந்தது. கிருஷ்ணன் பீமன் நின்று கொண்டிருந்த இடத்திற்கு விரைந்து ஓடினார். உயிர் பிழைக்கும் எண்ணம் அவனிடமிருந்தால் அக்கணமே ஆயுதங்களைக் கீழே போட்டு விட வேண்டும் என்றும் பீமனுக்கு யுத்த சூழ்ச்சியில் நம்பிக்கை இருந்ததால் அக்கணமே தரையில் விழுந்து வணங்க வேண்டும் என்று கிருஷ்ணன் வேண்டினார். கிருஷ்ணன் உத்தரவுப்படியே பீமன் நடந்து கொண்டான் ஒப்புயர்வற்ற நாராயணாஸ்திரம் உடனே பின்வாங்கி மறைந்து.

இந்த அதிசயத்தின் மர்மம் துரியோதனனுக்கு விளங்கவில்லை. பாண்டவர்கள் மொத்தமாக அழிந்து விடுவார்கள் என்று துரியோதனன் எதிர்பார்த்தான். நடந்தது இதற்கு நேர்மாறானது. நாராயண அஸ்திரத்தை மீண்டும் ஒருமுறை பிரயோகிக்க வேண்டுமென்று அஸ்வத்தாமனிடம் துரியோதனன் கேட்டுக்கொண்டான். மீண்டும் ஒருமுறை நாராயண அஸ்திரத்தை வரவழைத்தால் அது என்னையும் என் கட்சியை சேர்ந்தவர்கள் அனைவரையும் அழித்துவிடும் என்று கவலையுடன் பதில் அளித்தான்.

கோபத்திலும் துயரத்திலும் மூழ்கிக் கிடந்த அஸ்வத்தாமன் இப்பொழுது திருஷ்டத்யும்னன் மீது கோபம் கொண்டு அவனை தன்னுடன் யுத்தத்திற்கு வரும்படி கூறினான். இருவருக்குமிடையில் நெடுநேரம் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் பொழுது நடுவில் அர்ஜுனன் அஸ்வத்தாமனிடம் உன்னுடைய போர்த்திறமையை காட்ட தீர்மானித்திருக்கின்றாய் என்பது உன்னுடைய செயலில் இருந்து வெளிப்படையாகத் தெரிகிறது. நீ எங்கள் மீது கோபம் கொண்டு இருப்பதற்கு காரணம் இருக்கிறது. அதே விதத்தில் உன் மீது கோபம் கொள்வதற்கு பாண்டவர்களாகிய எங்களிடமும் காரணம் இருக்கிறது என்றான். பாண்டு மன்னனின் மக்களாகிய எங்களை வெறுக்கிறாய். திருதராஷ்டிரன் மக்களிடம் அன்புமிக வைத்திருக்கிறாய் என்று எங்களுக்கு தெரியும். நீ வீரியமிக்கவன் என்று உலகத்தினர் நினைக்கின்றனர். அது உண்மையானால் வலிமை வாய்ந்த உன்னோடு போர் புரிய நான் விரும்புகிறேன் என்றான் அர்ஜுனன்.