மகாபாரதம் | 7 துரோண பருவம் | பகுதி - 3
யுதிஷ்டிரரை உயிருடன் பிடிக்க துரோணர் 11 வது நாளில் செய்த முயற்சிகள் அனைத்தும் அர்ஜூனன் கேடயம் போல் இருந்தமையால் பலனில்லாமல் போனது. யுதிஷ்டிரரை உயிருடன் பிடிக்க வெண்டுமெனில் அர்ஜூனனை அவர் அருகில் இருக்க விடக்கூடாது. யுதிஷ்டிரன் இருக்கும் திசைக்கு எதிர் திசையில் அர்ஜூனனை இழுக்க வேண்டும் எனத்திட்டம் தீட்டினர் கௌரவர்கள். திரிகர்த்த மன்னன் சுசர்மனும் அவனது சகோதரர்கள் சத்தியரதன், சத்தியவர்மன், சத்தியகர்மன் மற்றும் அவர்களது மகன்கள் 35 பேரும் அர்ஜுனனை கொல்வோம் அல்லது போரிட்டு மடிவோம் என சபதம் செய்தனர். இதற்கு சம்சப்தக விரதம் என்று பெயர். 12 ம் நாள் யுத்தம் தொடங்கியது. தென்திசையிலிருந்து அர்ஜூனனுக்கு சவால் விட்டனர். அர்ஜூனனும் சவாலை ஏற்றுக்கொண்டான். தென் திசைக்கு அவர்களை எதிர்க்க செல்வதால் பாஞ்சால நாட்டு மன்னன் துருபதனின் சகோதரன் சத்யஜித்திடம் யுதிஜ்டிரரை பாதுகாக்கும் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு திரிகர்த்த மன்னனையும் அவருடைய சகோதரர்களையும் எதிர்த்துச் சென்றான் அர்ஜூனன்.

கடுமையாக நடைபெற்ற போரில் கிருஷ்ணரின் திறமையால் அர்ஜூனன் தேர் எல்லா இடங்களிலும் சுழன்றது. கௌரவர்களும் அர்ஜுனனிடம் வெற்றி அல்லது வீரமரணம் என்று போரிட்டனர். திரிகர்த்த வேந்தனுக்குத் துணையாக அவன் சகோதரர்களையும் சேர்த்து பல்லாயிரக்கணக்கான வீரர்களும் சேர்ந்து போரிட்டனர். ஆயிரம் ஆயிரம் வீரர்களை திரிகர்த்த வேந்தனுக்கு துணையாக துரியோதனன் அனுப்பினான். யுதிஷ்டிரரோ அங்கு ஆபத்தில் இருக்கிறார். இங்கோ படை வீரர்கள் வந்த வண்ணமாகவே இருந்தனர். கிருஷ்ணரின் அறிவுரை படி அர்ஜூனன் வாயு அஸ்திரத்தை விடுத்து அனைவரையும் வீழ்த்தினான். சுசர்மன் மட்டும் தப்பினான்.

தென்திசைப்போரை முடித்துக் கொண்டு அர்ஜூனன் யுதிஷ்டிரரைக் காக்கும் பொருட்டுத் துரோணரை எதிர்த்தான். ஆனால் துரோணரோ யுதிஷ்டிரரை உயிருடன் பிடிப்பதில் குறியாய் இருந்தார். அன்றைய போரில் துரோணரின் திறைமை அனைவரையும் கவர்ந்தது. துரோணரை முறியடிக்க திருஷ்டத்துய்மன் முயன்றான். தனது மரணம் இவனால் தான் என்பதை அறிந்த துரோணர் அவனைத் தவிர்க்க முயற்சித்தார். அப்போது துரியோதனனின் தம்பியருள் ஒருவன் துர்முகன் திருஷ்டத்துய்மனைத் தாக்கி போரிட துரோணர் அங்கிருந்து நகர்ந்தார். துரோணரை அழித்து போர் செய்வதற்காகவே வேள்வியில் இருந்து தோன்றிய திருஷ்டத்துய்மன் துர்முகனின் வில்லை முறித்து தேரையும் தவிடுபொடி ஆக்கினான்.

அதே நேரத்தில் சத்யஜித் தன் திறமையைக் காட்டி யுதிஷ்டிரரைக் காக்க முற்பட்டான். அவனுக்கும் துரோணருக்கும் நடந்த போர் தீவிரமாய் இருந்தது. துரோணர் மீது பல அம்புகளைச் செலுத்தினான் அவன். அதனால் கோபமுற்ற துரோணர் விட்ட அம்பு அவன் தலையைக் கொய்தது. சத்யஜித் வீர மரணம் எய்தினான். சத்யஜித்தின் மரணம் கண்ட விராடனின் தம்பி சதானீகன் துரோணரை எதிர்க்க அவனையும் அவர் கொன்றார். இவர்கள் இருவரின் மரணம் பாண்டவர்களுக்கு பேரிழப்பாக இருந்தது.