மகாபாரதம் | 8 கர்ண பருவம் | பகுதி - 2
பாண்டவ சகோதரர்களில் நகுலனை எதிர்த்து கர்ணன் யுத்தம் செய்தான். இருவருக்கும் இடையில் யுத்தம் துவங்கியது. எடுத்த எடுப்பிலேயே ஒருவர் வில்லை மற்றவர் ஒடித்துத் தள்ளினர். இருவரும் இரண்டாவது வில்லை எடுத்தனர். நகுலனின் இரண்டாவது வில்லை கர்ணன் ஒடித்தான். பிறகு அவனுடைய குதிரைகளையும் தேரோட்டியையும் அழித்தான். அதைத் தொடர்ந்து நகுலன் இப்பொழுது தரையில் நின்று கொண்டிருந்தான். நகுலன் தனது வாளை வெளியில் எடுத்தான். அக்கணமே வாளை கர்ணன் துண்டித்தான். நகுலனுடைய கேடாயம் கதை ஆயுதங்கள் அனைத்தையும் கர்ணன் ஒடித்தான். இப்போது நகுலன் ஆதரவற்றவனாக நின்றான். வெற்றி வீரனாக கர்ணன் அவனை புன்சிரிப்புடன் பார்த்தான். நகுலன் தலைகுனிந்து தனக்கு ஏற்பட்ட அவமானமாக கருதி நின்றான். கர்ணன் அவனை சமாதனப்படுத்தி வீரியத்துடன் திரும்பிப் போகுமாறு புத்திமதி கூறினான். நகுலனை கர்ணன் கொன்றிருக்கலாம். ரகசியமாக தன் தாய் குந்திக்கு கொடுத்திருந்த வாக்குறுதியின்படி நகுலனை அவன் கொல்லவில்லை.

யுதிஸ்டிரனுக்கும் துரியோதனனுக்கும் இடையில் யுத்தம் நடந்தது. இருவரும் சிறிதேனும் சலிப்படையாமல் யுத்தம் செய்தனர். மழை பெய்வதற்கு நிகராக இருவரிடத்திலும் இருந்து அம்புகள் வெளியே பாய்ந்தன. நெடுநேரத்திற்கு பிறகு யுதிஷ்டிரன் ஒரு பயங்கரமான அம்பை எடுத்து துரியோதனன் மீது எய்தான். துரியோதனன் தள்ளாடி கீழே விழுந்தான். மற்றுமொரு அம்பை யுதிஷ்டிரன் துரியோதனன் மீது எய்திருந்தால் துரியோதனனை கொன்றிருக்கலாம். பீமன் துரியோதனனை கொல்வதாக சபதம் செய்தது யுதிஷ்டிரனுக்கு ஞாபகத்துக்கு வந்தது. உடனே துரியோதனனே விட்டுவிட்டு யுதிஷ்டிரன் அங்கிருந்து சென்றான். சூரியன் மறைய பதினாறாம் நாள் யுத்தம் முடிவுக்கு வந்தது.

பதினாறாம் நாள் நடந்த யுத்தத்தை குறித்து துரியோதனன் அதிருப்தி அடைந்தான். நகுலனை கர்ணன் கொன்றிருக்கலாம் ஆனால் அதற்கு நேர்மாறாக விளையாட்டு போராட்டத்தை கர்ணன் புரிந்தான். இது குறித்து துரியோதனன் கர்ணனிடம் புகார் எதுவும் கூறவில்லை. மாறாக கர்ணனை பெருமைபடுத்தி பேசினான். கர்ணா அர்ஜூனனுடைய மரணம் எல்லா பிரச்சினைகளையும் நீக்கி வைக்கும். இச்செயலை செய்ய வல்லவன் நீ ஒருவனே தயவு அர்ஜூனனை கொல்வதில் உன் கருத்தை செலுத்து. நாம் முன்னேற்றம் அடைவதும் அழிந்து போவதும் இப்போது உன் கைவசத்தில் இருக்கிறது என்று கூறினான். இதனைக்கேட்ட கர்ணன் நாளை அர்ஜூனனை கொல்வேன் என்று சத்தியம் பண்ணுகிறேன். இல்லை என்றால் அம்முயற்சியில் நான் உயிர் துறப்பேன் என்று துரியோதனனிடம் தீர்மானமாக கூறிவிட்டு உறங்க சென்றன். கர்ணனுக்கு உறக்கம் வரவில்லை. அவனுடைய நிலஉலக வாழ்க்கையில் அன்றைய இரவு தான் கடைசி இரவு என்ற கருத்து அவனுடைய உள்ளத்தில் எழுந்தது. அடுத்த நாள்தான் மடிந்து போவது உறுதி என்ற எண்ணம் அவன் உள்ளத்தில் உதித்தது. ஆனாலும் அவன் மடிவதற்கு அஞ்சவில்லை.