பீமன் துச்சாதனனை தேடினான். துச்சாதனன் யானையின் மீது அமர்ந்து போரிட்டு கொண்டிருந்தான். அவனை நோக்கி விரைந்தான் பீமன். துச்சாதனனிடம் பீமன் தன்னுடைய முழு பலத்தையும் காட்டிக்கொள்ளவில்லை. துச்சாதனன் தன்னுடைய திறமை முழுவதையும் காட்டுவதற்க்கான வாய்ப்பை முதலில் பீமன் அவனுக்கு கொடுத்தான். தற்காப்புக்காக போர் புரிவதைப்போன்று பீமன் பாசாங்கு பண்ணினான். துச்சாதனன் பத்து அம்புகள் எய்தால் பீமன் நான்கு ஐந்து அம்புகளை மட்டுமே திருப்பி எய்தான். இத்தகைய போராட்டம் கௌரவ சகோதரர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. துச்சாதனன் வெற்றி பெறுவான் என்ற நம்பிக்கை அவர்களுக்கு வந்தது. திணறிக் கொண்டே சண்டை போடுவதாக பாசாங்கு பண்ணிய பீமன் துச்சாதனனின் பழைய அக்கிரமங்களை மனதிற்குள் எண்ணி பார்த்தான். அதன் விளைவாக அவனிடம் கோபம் அதிகரித்தது. கோபம் உச்சநிலைக்கு வந்தவுடன் தன் கதாயுதம் கொண்டு துச்சாதனன் இருந்த யானையை வீழ்த்தினான்.
ஒரு ஆட்டுக்குட்டியின் மீது சிங்கம் பாய்வது போன்ற துச்சாதனன் மீது பாய்ந்தான். துச்சாதனன் தோளைப் பிடித்தபிடி மரணத்திற்கு நிகரானதாக இருந்தது. துச்சாதனன் கையில் இருந்த ஆயுதங்கள் நழுவிக் கீழே விழுந்தது. பீமனை உற்று நோக்கிய துச்சாதனன் திகைத்து நின்றான். மூன்று வருஷங்களுக்கு முன்பு சபை நடுவே வைத்து திரௌபதியை மானபங்கம் செய்தாய். பழிக்குப்பழி வாங்கும் நாளுக்காக நான் காத்திருந்தேன். அன்று உனது அடாத செயலை பார்த்த மற்றவர்கள் பலர் இப்போது இங்கு இருக்கின்றனர். பாவியாகிய நீ அழிந்து போவதை பார்த்து அவர்கள் கலங்கட்டும் என்று கூறிய பீமன் மின்னல் வேகத்தில் துச்சாதனனை தாக்கி தரையில் விழச் செய்தான் கழுத்தில் தன் காலால் மிதித்தான். அவனது வலது கையை பிடித்து இந்த கை தானே திரௌபதியின் முடியை பிடித்து இழுத்து வந்தது என்று கூறி அவன் வலது கையை உடம்பில் இருந்து பிய்த்து எடுத்தான். மீண்டும் இந்த கை தானே திரௌபதியின் சேலையை உருவியது என்று அவனது இடது கையை பிய்த்து எடுத்தான். தன் இரு கரங்களில் வலிமை தாங்கி துச்சாதனின் மார்பை பிளந்தான். துச்சாதனன் இறந்தான். துச்சாதனன் மார்பிளிருந்து வழிந்த குருதியை பருகினான். சிறிது குருதியை தன் உள்ளங்கையில் ஏந்தி திரௌபதி இருக்கும் இடம் நோக்கி நடந்து அவளிடம் அந்த குருதியை கொடுத்து தன் சபதத்தை முடித்தான். துச்சாதனன் ரத்தத்தால் தன் தலை முடியை கொதி முடித்து தன் சபதத்தை நிறைவேற்றினாள் திரௌபதி. மீண்டும் போர்க்களம் திரும்பினான் பீமன்.
முதலில் பீமனிடம் இருந்து பின்வாங்கிய கர்ணன் இப்போது பீமனை நோக்கி சென்றான். இருவருக்கும் கடும் போர் மூண்டது. வெற்றிக் களிப்பில் இருந்தான் பீமன். பீமனிடம் தோல்வியின் தாக்கத்தில் இருந்தவன் கர்ணன். வீறு கொண்டு கர்ணன் பாய வெற்றிக் களிப்பில் செருக்கில் இருந்த பீமன் விரைவில் களைத்துப் போனான். ஆயுதங்கள் ரதம் என தன் உடமைகள் அனைத்தையும் இழந்து அந்த இடத்தை விட்டு வேறிடம் செல்ல முயன்றான். அவனைத் தொடர்ந்த கர்ணன் யாராலும் வெல்ல இயலாதவன் எனும் செருக்கு இருந்தால் வெற்றி உனக்கு நிரந்தரம் அல்ல எனக் கூறினான். பீமனை கொல்லாமல் தன் தாய் குந்திக்கு அளித்த வாக்குறுதியை மீண்டும் நிறைவேற்றினான் கர்ணன்.