அன்றைய யுத்தத்தில் பாண்டவர்களை தோற்கடிப்பதும் அர்ஜூனனை கொல்வதும் கர்ணன் அமைத்திருந்த போர் திட்டமாகும் இந்தத் திட்டத்தின்படி அவன் நடந்து கொண்டான். யுதிஷ்டிரன் இருந்த இடத்திற்கு ரதத்தை ஓட்டிச் செல்லும் படி சல்லியனை கர்ணன் கேட்டுக்கொண்டான். சல்லியனும் அவ்வாறே செய்தான். செல்லும் வழியில் சல்லியன் பாண்டவர்களை பாராட்டி பேசினான். இதன் விளைவாக கர்ணனுக்கு இருந்த ஆர்வம் தனிந்தது. சல்லியன் கூறியது கர்ணனுக்கு பிடிக்கவில்லை ஆயினும் பிரச்சனைகள் வரவேண்டாம் என்று சகித்துக்கொண்டான்.
யுதிஷ்டிரரை கர்ணன் எதிர்த்தான். யுதிஷ்டிரர் கர்ணன் மீது அம்பு மழை பொழிந்தார். பதிலுக்கு கர்ணனின் பத்து அம்புகள் யுதிஷ்டிரரது உடமைகளை அழித்தது. கோபம் கொண்ட யுதிஷ்டிரர் தனது சக்தி ஆயுதத்தை கர்ணன் மேல் பிரயோகித்தார். கர்ணன் மூர்ச்சை அடைந்து ரதத்தில் வீழ்ந்தான். மூர்ச்சை தெளிந்து ஏழுந்த கர்ணன் யுதிஷ்டிரரை முறியடிப்பது என முடிவு கட்டி களத்தில் இறங்கினான். யுதிஷ்டிரரின் ரதத்திற்கு காவலாய் இருந்த அனைத்து வீரர்களையும் துவம்சம் செய்தான். யுதிஷ்டிரர் வில்லை ஓடித்தான். யுதிஷ்டிரர் வேறு வில் கொண்டு கர்ணன் மீது அம்பை எய்தார். அது இலக்கை நெருங்குகையில் கர்ணன் வேறொரு அம்பால் அதை முறியடித்தான். கோபமுற்ற யுதிஷ்டிரர் ஒரு தெய்வீக அஸ்திரத்தை கர்ணன் மீது ஏவினார். அதுவும் தவறாது நான்காய் பிரிந்து கர்ணனின் இரு தோள்களையும் ஒன்று அவன் மார்பையும் ஒன்று அவன் தலையையும் தாக்கியது. தாக்கிய அனைத்து இடங்களிலும் குருதி வழிய கர்ணன் இன்னும் மூர்க்கமானான்.
கர்ணனது ஒரு அஸ்திரம் யுதிஷ்டிரரின் தேரை சுக்கல் சுக்கலாக்கியது. யுதிஷ்டிரர் வேறு தேர் தேடி அந்த இடம் விட்டு விலக கர்ணன் அவரைத் தொடர்ந்து சென்று வழி மறித்தான். யுதிஷ்டிரரைக் கொல்லும் வாய்ப்பு இருந்தும் தன் தாய் குந்திக்கு கொடுத்த வாக்குறுதிக்காக யுதிஷ்டிரரை நீங்கள் உங்கள் குருவிடம் கற்றவை அனைத்தும் மறந்து போனீர் போல சென்று மீண்டும் அதை எல்லாம் நினைவு படுத்திக் கொண்டு வாருங்கள். சண்டை இடலாம் எனக்கூறி அவரை விட்டான். இதனால் பெரும் அவமானம் அடைந்து உள்ளம் தளர்ந்து பாசறைக்குத் திரும்பினார் யுதிஷ்டிரரர்.
ஒருவர் பின் ஒருவராக தன்னை எதிர்க்க வந்த பாண்டவ அதிரதர்களை கொன்று குவித்து கொண்டு இருந்தான் கர்ணன். செல்லும் வழியெல்லாம் தன் முத்திரையை பதித்தான். ஆயிரக் கணக்கான வீரர்கள் இருந்த இடம் தெரியாது அழிந்தனர். கௌரவ படைகள் கர்ணனின் அம்புகளையும் அவனின் வலிமையான தோள்களை மட்டுமே நம்பி இருந்தன. அதை கர்ணனும் நன்கு அறிந்திருந்தான். பாண்டவப் படையினர் கர்ணனின் வீரத்தில் அழிந்து கொண்டு இருந்தனர். அவர்களைக் காக்க அர்ஜுனன் அங்கே விரைந்து வந்து சேர்ந்தான்.