மகாபாரதம் | 8 கர்ண பருவம் | பகுதி - 8
அர்ஜுனனின் பக்கம் யுதிஷ்டிரைத் தவிர்த்து சகோதரர்கள் மூவரும், சிகண்டி, சாத்யகி என அனைவரும் இருக்க அவர்கள் பின்னும் ஆயிரக்கணக்கில் வீரர்கள் அணிவகுத்து நின்றனர். கர்ணனின் பக்கம் துரியோதனன், கிருதவர்மன், கிருபர், சகுனி, அஷ்வத்தாமன் அனைவரும் இருந்தனர். அவர்கள் பின்னனியில் ஆயிரக்கணக்கில் வீரர்கள் அணிவகுத்து நின்றனர். கர்ணனும் அர்ஜூனனும் போரில் இறங்கினர். இருவருக்கும் இடையே கடுமையான யுத்தம் துவங்கியது. இரு வீரர்களுமே தங்கள் மனதில் வெற்றி அல்லது வீரமரணம் எனும் எண்ணத்தை விதைத்திருந்தனர். துவக்கம் அர்ஜுனனிடம் இருந்து. ஆக்னேய அஸ்திரத்தை கொண்டு கர்ணனுக்கு துணை இருந்த அனைத்து வீரர்களையும் அக்னி கொண்டு துரத்தினான். அதற்கு பதிலாய் கர்ணன் வாருணாஸ்திரம் எய்தான். அது கரிய மேகங்களுடன் கூடிய மழையை வருவித்து அந்த இடத்தையே வெள்ளக்காடாக ஆக்கியது.

அர்ஜுனன் வாயுவாஸ்திரம் கொண்டு அந்த மழை மேகங்கள் அனைத்தைம் தூர துரத்தினான். பின்னர் இந்திரனால் தனக்கு தரப்பட்ட சக்தி அஸ்திரத்தை கர்ணன் மேல் பிரயோகித்தான். அஸ்திரத்தின் வலிமையால் ஆயிர கணக்கான அம்புகள் காண்டீபத்திலிருந்து பாய்ந்து கர்ணனின் உடலை பதம் பார்த்தன. அதற்கு பதிலாக பார்கவா அஸ்திரத்தை கர்ணன் பிரயோகித்தான். அது பாண்டவ சேனையின் ஆயிரக்கணக்கான வீரர்களைக் கொன்றது. அதில் கோபம் கொண்ட அர்ஜுனன் கிருஷ்ணராலும் பீமனாலும் ஊக்கம் பெற்று பிரம்மாஸ்திரத்தை பிரயோகித்தான். அது கர்ணனின் தரப்பின் ஆயிரம் வீரர்களைக் கொன்றது. கர்ணன் அதற்கு பதிலாக ஐந்து சர்ப்ப அம்புகளை எடுத்து அதை கிருஷ்ணரின் மீது ஏவினான். அது கிருஷ்ணரின் உடலில் ஊடுருவி பூமிக்குள் பாய்ந்து மீண்டும் கர்ணனிடமே செல்லத்துவங்க அர்ஜுனன் அவற்றை தன் அம்புகளின் மூலம் துண்டு துண்டாக்கினான். அந்த அம்பினால் கிருஷ்ணருக்கு பாதிப்பு எதுவும் இல்லாமல் எப்போதும் போல சிரித்துக் கொண்டே இருந்தார். கிருஷ்ணரை கர்ணன் தாக்கியதில் கோபம் கொண்ட அர்ஜுனன் கர்ணன் சேனையில் கர்ணனுக்கு துணை இருந்த ஆயிரக்கணக்கான வீரர்களைக் கொன்று குவித்தான். அர்ஜுனனின் தாக்குதலில் அஞ்சிய கர்ணனின் சேனை வீரர்கள் அனைவரும் அவனை விட்டு விலகிச் சென்றனர். தனி ஒருவனாய் அர்ஜுனனையும் அவனைக் காக்க நின்ற வீரர்களையும் தாக்கினான் கர்ணன்.

அர்ஜுனனின் தாக்குதலில் கர்ணனின் ரதம் சில அடிகள் வரை பின்னுக்குத் தள்ளப்பட்டது. சுதாரித்து கொண்ட கர்ணன் அர்ஜுனனின் ரதத்தை தாக்கினான். கர்ணனின் தாக்குதலில் ரதம் சில அங்குலங்கள் மட்டுமே பின்னுக்குத் தள்ளப்பட்டது. கிருஷ்ணர் உடனே எழுந்து நின்று சபாஷ் கர்ணா. உன் வலிமையையும் நான் மெச்சுகிறேன் என்று பாராட்டினார். கோபம் கொண்ட அர்ஜுனன் கிருஷ்ணரை பார்த்து என் தாக்குதலில் கர்ணனின் ரதம் சில அடிகள் தூரமாக நகர்ந்ததே அதற்கு நீங்கள் ஒன்றுமே சொல்லவில்லையே. நமது ரதம் சில அங்குலம் நகர்ந்தற்க்கு அவனை பாராட்டுகிறீர்களே என்றான். அர்ஜுனா அவன் ரதத்தில் மனிதர்களான சல்லியனும் கர்ணனும் மட்டும் தான் இருக்கிறார்கள். உன் ரதத்தில் நீயும் மூவுலகையும் தன்னுள்ளே அடக்கிய நானும் இருக்கிறேன். கூடவே உன் தேரின் கொடியில் மகா பலசாலியான அனுமன் இருக்கிறார். நாங்கள் இருவரும் இருக்கும் ரதத்தை எந்த மனிதனாலும் அசைக்கக் கூட முடியாது. ஆனால் கர்ணனின் தாக்குதலில் ரதம் சில அங்குலங்கள் நகர்ந்திருகிறதே. நானும் அனுமாரும் இல்லை என்றால் நினைத்துப்பார் உன் நிலைமையை. உன் தேர் இந்த பூலோகத்தில் இருந்தே தூக்கி எரியப்பட்டிருக்கும் என்றார்.