மகாபாரதம் | 9 சல்லிய பருவம் | பகுதி - 1
கிருபாச்சாரியார் துரியோதனனிடம் உன்னை நான் உள்ளன்போடு நேசிக்கிறேன். நீ நெடுநாள் வாழ்ந்திருக்க வேண்டும் என்பது என் விருப்பம். இந்த யுத்தத்தை நீ தொடர்ந்து நடத்தினால் அழிந்து விடுவாய். பாண்டவர்கள் இப்பொழுதும் சமாதானத்திற்கு தயாராக இருக்கின்றனர். அவர்களோடு சமாதானம் செய்து கொண்டு அமைதியாக நீ நெடுங்காலம் வாழ்ந்து இருப்பாயாக என்று கூறினார். அதற்கு துரியோதனன் ஆச்சாரியாரே என் மீது தங்கள் அன்பு வைத்திருக்கிறார்கள் என்பதில் எனக்கு ஐயமில்லை. என் மீது அன்பு வைத்திருந்த அனைவரும் ராஜ்யத்தை எனக்காக வெல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு எனக்காக உயிர் கொடுத்திருக்கிறார்கள். இப்பொழுது நான் பாண்டவர்களுடன் சமாதானம் செய்து கொண்டால் இறந்த என் நண்பர்களுக்கு நான் துரோகி ஆவேன். நானும் மடிந்து போய் அவர்களோடு சேர்வதே முறை. இரண்டாவதாக பாண்டவர்களுக்கு பின்னணியில் நான் ஒருபோதும் இருக்க மாட்டேன். யுதிஷ்டிரன் யுவராஜாவாக இருந்த பொழுது அவன் என்னை விட மிக்கவனாக மிளிர்ந்தான். யுவராஜா பதவியில் இருந்து அவனை அப்புறப்படுத்தினேன். பிறகு அவன் இந்திரப்பிரஸ்தத்தை உருவாக்கினான். அங்கருந்தும் அவனை கீழே தள்ளி நான் வெற்றி பெற்றேன். பாண்டவர்களோடு சேர்ந்து இருப்பது என்பது ஒரு பொழுதும் ஆகாது என்று கூறினான்.

பதினெட்டாம் நாள் யுத்தத்திற்கு கௌரவ படைகளுக்கு சேனாதிபதியாக இருக்கும் படி துரியோதனன் அஸ்வத்தாமனை கேட்டுக்கொண்டான். அதற்கு அஸ்வத்தாமன் திறமை வாய்ந்த போர்வீரர்களுக்கு இடையில் சல்லியன் எல்லோருக்கும் மூத்தவர். அவரை சேனாதிபதியாக்கலாம் என்று கூறினான். துரியோதனன் சல்லியனிடம் சென்று சேனாதிபதியாக இருந்து எனக்கு வெற்றியை தேடி தாருங்கள் என்று கேட்டுக் கொண்டார். துரியோதனின் வேண்டுகோளுக்கிணங்க சல்லியன் சேனாதிபதி பொறுப்பை ஏற்றுக்கொண்டு உனக்கு சேனாதிபதியாக இருந்து என் கடமையை நிறைவேற்றுகிறேன் என்று கூறினார்.

கௌரவ பாசறையில் நிகழ்ந்த இத்திட்டத்தை கேட்ட யுதிஷ்டிரன் பெரிதும் தயங்கினார். கௌரவ படைகளில் உயிரோடு இருப்பவர்களில் சல்லியனுக்கு நிகரானவர் யாருமில்லை. அவனை வெல்வதும் யாருக்கும் சாத்தியமில்லை. கிருஷ்ணரும் இதனை உண்மை என்று ஒத்துக் கொண்டார். சல்லியனை அழிக்க திட்டம் ஒன்றை கிருஷ்ணன் எடுத்துரைத்தான். யுதிஷ்டிரன் சல்லியனை எதிர்த்து போர் புரிய வேண்டும் அறநெறி பிறழாத சல்லியனை வெற்றிபெற அறநெறி பிறழாத யுதிஷ்டிரனே எதிர்க்க சரியானவன் என்றும் இதை தவிர வேறு எந்த வழியும் பலனளிக்காது என்றார் கிருஷ்ணர். யுதிஷ்டிரர் சல்லியனை எதிர்த்து போர் புரிய சம்மதித்தார்.