மகாபாரதம் | 9 சல்லிய பருவம் | பகுதி - 3
பாண்டவர்களில் சகாதேவன் சகுனியை கொல்வேன் என்ற தன் சபதத்தை நிறைவேற்றினான். பீமன் 100 கௌரவர்களையும் அழிப்பேன் என்ற சபதத்தில் துரியோதனை தவிர்த்து அனைவரையும் அழித்துவிட்டான். துரியோதனனையும் அழித்து தன் சபதத்தை முடிக்க துரியோதனனை தேடினான்.

துரியோதனன் யுத்தகளத்திலிருந்து நடந்த செல்ல ஆரம்பித்தான். இந்த வம்சம் முழுவதும் அழிந்து போவதற்கு நீயே காரணமாக இருப்பாய் என்று விதுரர் துரியோதனிடம் கூறியது அவனுக்கு அப்போது ஞாபகத்துக்கு வந்தது. தன்னுடைய தேகம் தீயினுள் போட்டு வெந்து கொண்டிருப்பது போன்று இருந்தது துரியோதனனுக்கு. தன்னுடைய கதையை தவிர அவன் கைவசம் வேறு எதுவும் இல்லை. தன் கதாயுதத்தை மட்டும் எடுத்துக்கொண்டு நடந்து சென்ற அவன் அருகில் இருக்கும் துவைபாயன தடாகத்தை அடைந்தான். தன் உடலின் எரிச்சலை தணிப்பதற்கு தடாகத்திற்குள் அமர்ந்தான்.

துரியோதனன் மரணத்திலிருந்து எப்படியோ தப்பித்துக் கொண்டு ஓடிவிட்டான் என்று கருதிய பாண்டவர்கள் ஏமாற்றமடைந்தனர். அவன் உயிர் பிழைத்திருத்தால் யுத்தம் இன்னும் பூர்த்தியடையவில்லை என்று பாண்டவர்கள் எண்ணினார்கள். வேட்டைக்காரர்கள் கூட்டமொன்று அவர்களை அணுகி துரியோதனன் துவைபாயன தடாகத்தில் அமர்ந்து இருப்பதாக தெரிவித்தார்கள். அது மாலை நேரம். பாண்டவர்களும் கிருஷ்ணன் விரைந்து சென்று துரியோதனனை கண்டுபிடித்தனர். துரியோதனனை கண்ட யுதிஷ்டிரர் நீ ஒரு க்ஷத்திரன் என்று எண்ணியிருந்தேன். ஆனால் நீ ஒரு பயந்தாங்கோலி போன்று உன் உயிரை காப்பாற்றுவதற்கு இங்கு வந்து ஒளிந்து கொண்டு இருக்கின்றாய். உனக்காக உயிர்த்தியாகம் செய்த கூட்டத்தாரை நீ மறந்து விட்டாய் என்றான். அதற்கு துரியோதனன் என் உடலுக்கு சிறிது ஓய்வு தருதல் பொருட்டே நான் எங்கே இருக்கின்றேன். என்னுடைய சகோதரர்கள் நண்பர்கள் அனைவரையும் இழந்தேன். இப்போது ராஜ்யத்தில் எனக்கு ஆசை ஏதும் இல்லை. ஆகையால் இந்த ராஜ்யத்தை உனக்கு தானமாக கொடுத்து விட்டு காட்டிற்குள் சென்று தவ வாழ்க்கை வாழ எண்ணியுள்ளேன் என்றான்.

அன்று முதியவர்கள் கொடுத்த புத்திமதியை நீ ஏற்கவில்லை. நாங்கள் சம்பாதித்த ராஜ்ஜியத்தில் ஐந்து ஊசிமுனை நிலம் கூட கொடுக்க மாட்டேன் என்று மறுத்தாய். இப்பொழுது யுத்தத்தில் தோற்கும் தருவாயில் தானமாக கொடுக்கின்றேன் என்கிறாய். உன்னுடைய பித்தலாட்டம் வெளிப்படையாக அனைவருக்கும் தெரிகிறது. இந்த ராஜ்யம் உன்னுடையது என்று நீ உரிமை கொண்டாடினால் உன்னை வென்று அந்த ராஜ்யத்தை பெற நான் விரும்புகின்றேன். நான் ஒரு க்ஷத்திரன் என்பதை தயவு செய்து நீ தெரிந்துகொள். யாரிடமிருந்தும் நான் தானமாக எதையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அப்படியிருக்க உன்னை போன்ற எதிரி ஒருவனிடம் இருந்து நான் எப்படி தானமாக ஏற்பது யுத்தத்திற்கு வா என்று யுதிஷ்டிரர் அழைத்தார்.