மகாபாரதம் | 9 சல்லிய பருவம் | பகுதி - 5
பீமன் கொடுத்த ஒரு பயங்கரமான அடியில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு துரியோதனன் மேல் நோக்கி லாவகமாக குதித்தான். அவன் கால் கீழே படுவதற்குள் அவனுடைய இரண்டு தொடைகளையும் கதையால் ஓங்கி அடித்தான் பீமன். துரியோதனனின் இரண்டு தொடைகளும் உடைந்து அழிந்தன. துரியோதனன் நிற்க இயலாமல் கீழே வீழுந்தான்.

இடுப்புக்குக் கீழ் அடிப்பது பிழை. அது போர் நெறி ஆகாது. எந்த போர் வீரனும் இந்த அடாத செயலை ஆமோதிக்க மாட்டான். இது பீமனுக்கும் தெரியும். ஆனால் துரியோதனனின் கோபத்தை கிளப்புதல் பொருட்டே வேண்டுமென்றே பீமன் தொடையில் அடித்தான். அதன் பிறகு பீமன் துள்ளி குதித்தான் இக்காட்சியைப் பார்த்த துரியோதனன் ஆத்திரமும் சினமும் கொண்டான். பீமா இதுவா போர் முறை இதுவா சத்திரிய தர்மம் என்றான்.

துரியோதனனின் கூற்றைக் கேட்ட பீமன் துரியோதனா நீயா தர்மத்தைப் பற்றி பேசுகிறாய் அன்று ஒருநாள் எனக்கு விஷம் கொடுத்தாயே அது தர்மமா. கொடிகளால் கட்டி நதியில் வீசினாயே அது தர்மமா. அரக்கு மாளிகையில் எங்களைத் தங்கவைத்து தீயிட்டாயே அது தர்மமா. திரோபதியை சபையில் பலர் முன்னிலையில் துகில் உரிந்து மானபங்கம் செய்தாயே அது தர்மமா. எங்கள் குலக்கொழுந்தான அபிமன்யூவை நிராயுதபாணியாக்கி மூலைக்கு ஒருவராக நின்று கொன்றீர்களே அது தர்மமா. பாவத்தின் மொத்த வடிவமான நீயா தர்மத்தைப் பற்றியும் வீரத்தைப் பற்றியும் பேசுகிறாய். நீ செய்த செயல்களின் வழியாக குரு வம்சத்திற்கு பேரழிவைக் கொண்டு வந்த பொல்லாத பாவி நீ. இந்த நெருக்கடியில் உன்னுடைய தொடைகளை நொறுக்கி தள்ளுவேன் என்று நான் சபதம் ஏற்று இருக்கிறேன். அதே வேளையில் உன் தலையின் மீது என் காலை வைப்பேன் என்று சபதம் ஏற்றேன். அதனை இப்போது நிறைவேற்றுகிறேன் என்று கூறிக்கொண்டு தரையில் கிடந்த துரியோதனனை காலால் உதைத்து காலை அவன் தலையின் மீது வைத்து அழுத்தினான்.

பீமனின் இச்செயலை யுதிஷ்டிரர் விரும்பவில்லை. வீழ்ந்து கிடப்பவன் தலையில் காலை வைத்து அழுத்துதல் தர்மம் இல்லை என பீமனைக் கண்டித்தார். பீமன் செய்த இச்செயலுக்காக துரியோதனிடம் யுதிஷ்டிரர் மன்னிப்பு கேட்டார். நடந்த இந்த துர்பாக்கியங்கள் அனைத்தும் துரியோதனன் தனக்குத்தானே தேடிக் கொண்டவைகள் என்று அவனுக்கு விளக்கிக் காட்டினார். அதற்கு துரியோதனன் உலகத்தை ஒரு குடையின் கீழ் ஆண்ட வீரமும் க்ஷத்திரிய தர்மத்தின்படி போர்க்களத்தில் போரிட்ட பெருமிதத்துடன் உயிர் துறந்து நண்பர்களுடன் சொர்கத்தில் இருப்பேன் என்றான். படுகாயம் அடைந்த துரியோதனன் மரணத்தின் வாயிலில் நிற்கவோ நடக்கவோ முடியாத சூழ்நிலையில் தரையில் வீழ்ந்து கிடந்தான். இதற்கு மேல் அவனை தாக்க வேண்டாம் என்று முடிவெடுத்தனர் பாண்டவர்கள். தானாக இறந்து விடுவான் என்று கருதி அங்கிருந்து நகர்ந்தனர். ஆனால் அவன் உயிர் பிரியவில்லை. துரியோதனன் தன் தவறுகளுக்கு வருந்தவில்லை. பாண்டவர்கள் மீது இருத்த வஞ்சம் அவனை இன்னும் சாக விடாமல் உயிருக்கு உரமாகி கொண்டே இருந்தது.