மகாபாரதம் | 9 சல்லிய பருவம் | பகுதி - 6
பாண்டவர்கள் கௌரவர்களுடைய பாசறைக்கு சென்று அதை தங்கள் வசப்படுத்திக் கொண்டனர். அப்படி செய்தது கௌரவர்களை வெற்றி பெற்றதற்கு அறிகுறியாக இருந்தது. கிருஷ்ணர் அர்ஜூனனை தேரில் உள்ள கருவிகளை எடுத்துக் கொண்டு தேரில் இருந்து இறங்க சொன்னார். கொடியில் வீற்றிருந்த மஹா பலசாலியான அனுமாரையும் இறங்குமாறு வேண்டினார். அவர்கள் இறங்கியதுமே அர்ஜுனனின் தேர் பற்றியெரிந்தது. சுக்கு நூறாக வெடித்து சிதறியது. அதிர்ச்சி அடைந்த அர்ஜுனன் கிருஷ்ணரை பார்த்து இது என்ன விபரீதம் என்று வினவினான். அதற்கு கிருஷ்ணர் பீஷ்மர் துரோணர் கர்ணன் ஆகியோர் செலுத்திய அம்புகளால் முன்னமே தேர் எரிந்திருக்கும். நானும் சிரஞ்சீவி அனுமாரும் அதில் இருந்ததால் அழிவு ஏற்படவில்லை. நான் இறங்கியதும் அம்பு தாக்கிய வெப்பத்தால் தேர் எரிந்து விட்டது என்றார். பாண்டவர்கள் கிருஷ்ணரை வணங்கி நன்றி கூறினர். தர்மத்தை காக்க நடத்திய நாடகத்தில் அனுமாரின் பங்கு முடிந்தது என்று கூறி அவருக்கு விடை கொடுத்தார் கிருஷ்ணர். அனுமாரும் கிருஷ்ணரை வணங்கி பாண்டவர்களுக்கு ஆசி கூறி விடை பெற்றார்.

யுதிஷ்டிரர் கிருஷ்ணரிடம் வேண்டுகோள் ஒன்றை வைத்தார். உடனடியாக அஸ்தினாபுரம் சென்று பெரியப்பா திருதராஷ்டிரருக்கும் பெரிய தாய் காந்தாரிக்கும் ஆறுதல் சொல்ல வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார். இதனை ஏற்றுக்கொண்ட கிருஷ்ணர் அன்று இரவு பாண்டவர்கள் ஐவரும் பாசறைக்குள் தங்காமல் வெளியில் தங்கி உறங்குமாறு கேட்டுக்கொண்டார். கிருஷ்ணர் கூறியதை பாண்டவர்கள் ஏற்றக்கொண்டனர்.

திருதராஷ்டிரருக்கும் காந்தாரிக்கும் கிருஷ்ணர் ஆறுதல் கூறினார். உங்கள் துயரத்திற்கு துரியோதனனே காரணம். அவன் சன்றோர்களின் அறிவுரையை ஏற்கவில்லை. தான் என்னும் ஆணவத்தால் அழிந்தான். அவனால் பாண்டவர்கள் பட்ட கஷ்டத்தை சொல்லி மாளாது. காந்தாரி ஒருமுறை உன் மகன் துரியோதனனிடம் நீ என்ன கூறி ஆசி வழங்கினாய் என்று நினைவு இருக்கிறதா மகனே தர்மம் எங்கு உண்டோ அங்கு வெற்றி உண்டு என்றாயே அது அப்படியே நிறைவேறியது. எல்லாம் விதி. எனவே பாண்டவர்களிடம் கோபம் கொள்ள வேண்டாம் என்ற கிருஷ்ணரரின் அறிவுரையைக் கேட்ட காந்தாரி சற்று ஆறுதல் அடைந்தாள்.  

சல்லிய பருவம் முடிந்தது. அடுத்தது சௌப்தீக பருவம்.