கற்பூர தீபம் காட்டுவது ஏன் ?

கற்பூர தீபம் காட்டுவது ஏன் ?
பரம் பொருள் ஒளிமயமானவர். அதைக்குறிக்கவே தீபாரதனை வழிபாடு. தீபாரதனை ஒளியில் இறைவனின் திருவுருவம் கண்களுக்கு பிரகாசமாய் தெரிகிறது. மனதில் பக்தி ஒளிரும்போது தான் இறைவனை தரிசிக்க முடியும் என்று கொள்ளலாம்.

கற்பூரம் என்பது வாசனைகள் ஒன்று சேர்ந்த பொருள். கற்பூரத்தைக் கொளுத்தி இறைவனுக்கு முன் காட்டி எரிய விடும்போது நமது உணர்வுகளைப் பற்றும் வாசனைகள் எரிந்து உருவமழிந்துப் போகிறது என்பதையே பாவனையாகக் காண்கிறோம்.

மூலஸ்தானம் என்ற கருவறை எப்போதும் இருட்டாக இருக்கும் பகுதி, காற்றும் ஒளியும் வெளியிலிருந்து அங்கே செல்ல முடியாது. பிற எண்ணங்களுக்கு இடம் தராத நம்முடைய உள் மனதையே இந்த கர்ப்பக்கிகரம் பிரதிபலிக்கிறது.

அத்தகைய உள்மனதில் உறையும் இறைவன் சாதாரணமாக நமக்குப் புலப்படுவதில்லை. நடைதிறந்து, திரை விலகி மணி ஓசையுடன் தீபாரதனை நடைபெறும் போது இருள் நிறைந்த மூலஸ்தானத்தில் தூய்மையான ஓளிப்பிழம்பில் இறைவனை நாம் காண்கிறோம்.

அதுபோலவே ஞானம் பிரகாசிக்கும் போதும் நம் உள்ளத்தில் அறியாமை இருள் மறைந்து உள்ளே ஒளிரும் இறைவனின் தரிசனம் நமக்கு கிட்டும் என்பதையே தீபாராதனை மூலம் நமக்கு சொல்லப்படும் செய்தி.

கற்பூரம் தன்னை முற்றிலும் அழித்துக் கொண்டுவிடுகிறது. பூரணமாய் கரைந்து போய்விடுகிறது. அதைப் போலவே இறைவன் முன் நம்மை நாம் பூரணமாய் கரைந்து போய்விட வேண்டும்.

இறைவனுக்கு அவன் தந்த அனைத்தையும் அர்ப்பணித்து, தன்னையே ஆத்ம சமர்ப்பணம் செய்வதையே, கற்பூர தீபாரதனையும் அதனைக் கண்களில் ஒற்றிக்கொண்டு இறைவனது திருவடியில் வீழ்ந்து வணங்கும் நிகழ்வும் நமக்கு உணர்த்துகின்றன.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!