மகாபாரதம் பாரதத்தின் இரண்டு இதிகாசங்களுள் ஒன்றாகும். வியாச முனிவர் சொல்ல விநாயகர் எழுதியதாக மகாபாரதம் கூறுகிறது. மகாபாரதம் சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டுள்ளது. அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் மனிதனுடைய நால்வகை நோக்கங்களையும், சமூகத்துடனும், உலகத்துடனும் தனிப்பட்டவருக்கு உரிய உறவுகளையும், பழவினைகள் பற்றியும் இது விளக்க முற்படுகின்றது. இது 74,000க்கு மேற்பட்ட பாடல் அடிகளையும், நீளமான உரைநடைப் பத்திகளையும் கொண்ட இதில் 18 இலட்சம் சொற்கள் காணப்படுகின்றன. இதனால் இது உலகின் மிக நீண்ட இதிகாசங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இராமாயணத்திலும் நான்கு மடங்கும் இது நீளமானது. நவீன இந்து சமயத்தின் முக்கிய நூல்களிலொன்றான பகவத் கீதையும் இந்த இதிகாசத்தின் ஒரு பகுதியே. சந்திர குலத்தைச் சேர்ந்தவன் துஷ்யந்த மன்னன். இவனுக்கும் சகுந்தலைக்கும் பிறந்தவன் பரதன். இந்தப் பரதனது வம்சத்தைப் பாடுவதால் பாரதம் என்று இந்நூல் அழைக்கப்பட்டது. தொடக்கத்தில் இது 24000 அடிகளைக் கொண்டிருந்தபோது அது வெறுமனே பாரதம் எனப்பட்டது. பின்னர் இது மேலும் விரிவடைந்தபோது மகாபாரதம் என அழைக்கப்பட்டது. பரதனது வம்சத்தைச் சேர்ந்தவர்களே பாண்டவர்களும் கௌரவர்களும் ஆவர். இவர்கள் வாழ்க்கையையும், இவர்கள் தமக்குள்ளே நடத்திய போரினையும் மகாபாரதம் விரிவாக விவரித்துள்ளது. பரத வம்சத்தினரைப் போரில் வல்லவர்கள் என்று ரிக் வேதம் கூறுகிறது. பரதனைக் குறித்த செய்திகளைச் சில பிராம்மணங்கள் என்னும் வடமொழி நூல் கூறியுள்ளது. இவர்களுடைய நாடு குரு நாடு என்று பெயர் பெற்றது. இந்த நாட்டைப் பற்றிய குறிப்பை யஜீர் வேதம் வழங்கி உள்ளது.
மகாபாரதம் இயற்றிய வியாசரைப் பற்றி
சத்தியவதி என்பவள் ஓர் பரிசல் ஓட்டுபவள் ஓர் முறை நதியின் அக்கரையிலிருந்து இக்கரைக்குப் பரிசலை ஓட்டிவர முயன்ற போது வஷிஷ்டரின் மகன் சக்தி. சக்தியின் மகன் பராசரர் ரிஷி அவளது பரிசலில் வந்து ஏறினார். பெண்ணே நான் அக்கரைக்கு செல்ல வேண்டும. பரிசலில் என்னை அக்கரைக்கு அழைத்துச் செல்வாயா? என்று கேட்டார். அந்த முனிவரின் முகத்தைப் பார்த்தபோது சத்தியவதியின் உள்ளத்தில் இனம் புரியாத அன்பும், மரியாதையும், பக்தியும் உண்டாயிற்று. பரிசலில் ஏறுவதற்கு வேறு பயணிகள் யாரும் இல்லாதபோதும் அந்த ஒரு பயணிக்காக அவள் பரிசலை ஓட்டினாள்.
பரிசலில் ஏறி அமர்ந்த பராசரர் ரிஷி சத்தியவதியின் முகத்தைப்பார்த்தார். பின்னர் வானத்தைப் பார்த்தார். நான்கு திசைகளையும் பார்த்தார். கை விரல்களால் ஏதேதோ கணக்குப் போட்டுப் பார்த்துவிட்டு சத்தியவதி என்று அன்புடன் அழைத்தார் சத்தியவதி ஒருகணம் திகைத்து நின்றாள். ஐயா ஏன் பெயர் உங்களுக்கு எப்படித் தெரிந்தது? என்று ஆச்சர்யத்துடன் கேட்டாள். பெண்ணே உன் பெயர் மட்டுமல்ல உன் இந்தப்பிறவியின் வரலாறு மட்டுமல்ல உன் முந்திய பிறவியின் உண்மைகளையும் கூட நான் நன்கு அறிவேன். உன் உண்மையான தந்தையின் பெயரையும் உன் வளர்ப்புத்தந்தையின் பெயரையும் நான் அறிவேன் என்றார் பராசரர் ரிஷி. மேலே பேச முடியாமல் சத்தியவதி ஆச்சர்யத்தில் வாயடைத்து நின்று அந்த முனிவரை வணங்கினாள். பெண்ணே இந்த மீனவர் கிராமத்தின் தலைவன் உச்சைச்ரவஸ் உன் வளர்ப்புத் தந்தைதான். உன் உண்மையான தந்தை இந்த நாட்டின் அரசனாகிய உபசரிவசு. முந்திய பிறவியில் நீ சொர்க்கலோகத்தில் பித்ருக்களின் மானச கன்னியாக இருந்தாய். ஒருமுறை நீ அறியாமல் செய்த தவற்றின் பயனாக அவர்களின் சாபத்தால் ஒரு மீனின் வயிற்றில் மகளாகப் பிறந்தாய் என்றார்.
இன்று இந்த நேரம் மிகவும் சுபமான சர்வ முகூர்த்த நேரம். இவ்வாறு சர்வ லட்சணங்களும் நிறைந்த ஒரு பெண்ணுடன் நான் இந்தச் சர்வ முகூர்த்த வேளையில் இன்பம் கொண்டால் உலகுக்கெல்லாம் ஒளியாக விளங்கக்கூடிய ஒரு உத்தமமான குமாரன் பிறப்பான். நீ அதற்கு உடன்படுகின்றாயா? என்று கேட்டார். சுவாமி நான் என் தந்தையின் பாதுகாப்பில் வளரும் இளம் பெண். நீங்கள் சொல்வது எனக்குப் பொருந்துமா? என்று கேட்டாள். சத்தியவதி என் பெயர் பராசரன். பராசர முனிவர் என்று எல்லாரும் என்னை அழைப்பார்கள். நீயும் நானும் இன்று இந்த நதியின் நடுவில் சந்திக்க வேண்டுமென்பது இறைவன் வகுத்த விதி. அதேபோல் உனக்கும் எனக்கும் பிறக்கப்போகும் அருந்தவப் புதல்வன் உலகம் போற்றும் உத்தம மகா முனிவராக விளங்குவான் என்பதும் இறைவனின் சித்தம் என்றார். மேலும் இந்த சர்வ முகூர்த்த வேளையில் நாம் இருக்கும் இந்த இடம் முழுவதும் மூடுபனியால் மூடப்பட்டு விடும். யாருமே நம்மைப் பார்க்க மாட்டார்கள் என்று கூறினார். அவர் இவ்வாறு கூறியதும் சத்தியவதி அவரது விருப்பத்துக்குச் சம்மதித்தாள். அடர்ந்த மூடுபனிக்கு நடுவே பராசர முனிவரின் விருப்பத்துக்கு இணங்கினாள். அப்போது ஒரு அழகிய குழந்தை அவதாரம் செய்தது. குழந்தைக்கு துவைபாயணர் என்று பெயர் சூட்டனார். துவைபாயணர் தான் வியாசர்.
வியாசர் என்பது பெயரல்ல. அது ஒரு பதவி. ஜோதிடம் சொல்பவர்களை ஜோதிடர் என்ற பொதுப் பெயரால் அழைப்பது போல யாரெல்லாம் வேதங்களை பகுத்துப் பிரிக்கின்றனரோ அவர்கள் அனைவருமே வியாசர் தான். அந்தப் பதவியை அதற்கு முன் பலர் வகித்திருந்தனர். பராசர முனிவரின் மகனான துவைபாயனர் அதில் முக்கியப் பங்கு வகித்தார். மகாபாரதத்தில் அவரே வியாசர் என அழைக்கப்படுகின்றார். குழந்தை பிறப்பிலேயே அதிசய சக்திகள் வாய்க்கபெற்ற அவதார புருஷர் என்பதால் அவர் தன் தாயின் வயிற்றில் பத்து மாதம் வாசம் செய்யவில்லை. பராசர முனிவரின் அருளால் குழந்தை பிறந்த மறுகணமே சத்தியவதி மீண்டும் கன்னிப் பெண்ணாகவே மாறினாள். தன் தாயிடம் தான் துறவறம் பூண்டு செல்வதாகக் கூறினார். மகனைப் பிரியும் போது தாய் சத்தியவதி, எதாவது ஒரு இக்கட்டான நிலை வந்தால் நான் உன்னை நினைப்பேன். அப்போது நீ வந்து எனக்கு உதவ வேண்டும் என்றாள். துவைபாயணர் ஒப்புக் கொண்டார். யுகங்கள் நான்கு. கிருது, த்ரேதா, த்வாபர, கலி ஆகிய நான்கு யுகங்களையும் சேர்த்து சதுர் யுகம் என்று அழைக்கின்றோம். இவற்றில் மூன்றாவதான த்வாபர யுகத்தின் முடிவுக்காலத்தில் வேத வியாசர் அவதரித்தார்.
முன்காலத்தில் வேதங்களிலுள்ள பல ஸ்லோகங்கள் வெவ்வேறு இடத்திலுள்ள ரிஷிகளிடம் இருந்து வந்தன. வேத வியாசர் அனைத்து ஸ்லோகங்களையும் ஒன்றாகத் திரட்டி வேதங்களை நான்கு வகைகளாக பிரித்து அவைகளை ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள் என்று வகைப்படுத்தினார். பரமாத்மாவான இறைவனை ஜீவாத்மாவான மனிதன் எப்படி கண்டறியவேண்டும் என்பதை விளக்குவது தான் வேதம். இறைவனை மந்திரங்களாக துதித்து வழிபடும்படி வழிகாட்டுவது ரிக்வேதம். மனிதன் தன் ஆயுளில் செய்ய வேண்டிய சடங்குகள், அதற்கு தேவையான உபகரணங்கள், ஆட்சியில் இருப்பவர்கள் செய்ய வேண்டிய யாகங்கள் ஆகியவை பற்றி தெரிவிப்பது யஜுர் வேதமாகும். பாடல்களால் இறைவனை துதிப்பது சாம வேதம் ஆகும். மந்திர தந்திரம், மருத்துவம், சக்தி, வழிபாடு ஆகியவை பற்றி விளக்குவது அதர்வண வேதம். இவற்றை தொகுத்தார்.
துவைபாயன வியாசர் விரதங்களும் தவத்தாலும் வேதங்களை 4 வகையாக பிரித்த பின் அவற்றை அலசி ஆராய்ந்து அதில் உள்ள தர்மத்தை மகாபாரதம் என்னும் புனித வரலாறாக ஒருங்கிணைத்தார். சாதாரண மக்களுக்கு வேதம் புரியாது என்பதாலும் கலியுகத்தில் வேதம் அழியும் நிலைக்கு வந்துவிடும் என்பதாலும் அவற்றை சாதாரண மக்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்பதாலும் வேதத்தின் சாரமான தர்மத்தை மகாபாரதம் எனும் இதிகாசமாக படைத்தார். மகாபாரதத்தை எப்படி தன் சீடர்களுக்கு கற்பிப்பது என்று சிந்தித்தார்.
வியாசரின் சிந்தனையை அறிந்த பிரம்மா அவரது இருப்பிடத்திற்கு சென்றார். வியாசர் பிரம்மாவை பார்த்து கை கூப்பி வணங்கி அவரை ஆசனம் அமர வைத்தார். பிரம்மாவைப் பார்த்து வியாசர் சில சுலோகங்கள் ஏற்றியுள்ளேன். இதில் வேதங்களின் சூட்சுமங்கள். உபநிஷதங்களை வரும் சடங்குகள், அதன் அங்கங்கள், புராணங்கள் வரலாறு, ஆன்மீகம், சூரிய சந்திரனின் பரிமாணங்கள், காலங்கள், அறிவு, பயம், நோய், வாழ்வியல் வகைகள், நான்கு வர்ணங்களுக்கான விதிகள், கிரகங்கள், நட்சத்திரங்கள், யுகங்கள், ரிக், யஜூர், வேத சாத்திரம், உச்சரிப்பு சாத்திரம், மருத்துவ சாத்திரம், தர்மசாஸ்திரம், வானவர், மனிதர் பிறப்பு, புண்ணிய நதிகள், புனிதமான இடங்கள், மலைகள், காடுகள், சமுத்திரம், வானவர், நகரங்கள், கல்பங்கள், போர்கலை பலவிதமான நாடுகள், மொழிகள், மனிதர்களின் நாகரிகங்கள் எல்லாவற்றையும் பிரதிபலிக்கின்ற சுலோகங்களை இயற்றியிருக்கின்றேன். இவற்றை எழுத இந்த உலகத்தில் ஒருவரையும் காணவில்லை என்றார். இதற்கு பிரம்மா வியாசரிடம் இவற்றை எழுதுவதற்கு நீங்கள் வினாயகரை தியானிப்பீர்களாக என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினார். வியாசர் வினாயகரை தியானித்தார். வினாயகர் வியாசர் முன் தோன்றினார். வியாசர் விநாயகரை வணங்கி தாம் இற்றிய சுலோகத்தை நீங்கள் எழுத வேண்டும் என்றார் இதைக்கேட்ட வினாயகர் எனது எழுத்தாணி ஒருகணமும் நிற்காது நீங்கள் தொடர்ச்சியாகப் பாடல்களைச் சொல்வதாக இருந்தால் அந்த சுலோகங்களை எழுதித் தருவதாக சொல்கிறார். வியாசரும் எழுதும் முன் தன் பாடல் வரிகளைப் பிள்ளையார் புரிந்து கொண்டு எழுதினால் அந் நிபந்தனைக்கு உடன்படுவதாகக் கூறினார். விநாயகர் ஓம் என்று சொல்லி விட்டு எழுத ஆரம்பித்தார் வியாசரும் சொல்லத் துவங்கினார். இடையிடையே புரிந்து கொள்வதற்கு கடினமான சொற்களையும் கடினமான கருத்துகளையும் சேர்த்து அந்த வரலாற்றை தனது ஒப்பந்தத்திற்கு ஏற்ப வியாசர் சொல்ல விநாயகர் எழுதினார்.
பாரதத்தையும் அதன் பெரும் கிளைகளையும் 24000 அடிகளைக் கொண்ட சுலோகங்களை படைத்தார். அதன்பிறகு 150 அடிகளைக் கொண்ட சுருக்கத்தையும் படைத்தார். அதன் இன்னொரு படைப்பாக மொத்தம் 60 லட்சம் செய்யுள் அடிகளைக் கொண்ட சுலோகங்களை படைத்தார் அதில் 30 லட்சம் செய்யுள் அடிகள் தேவலோகத்தில் இருப்பவர்களால் அறியப்பட்டுள்ளது. 15 லட்சம் செய்யுள் அடிகள் பித்ரு உலகத்தில் இருப்பவர்களால் அறியப்பட்டுள்ளது. 14 லட்சம் கந்தர்வ லோகத்தில் இருப்பவர்களால் அறியப்பட்டுள்ளது. 1 லட்சம் இப்போது இருக்கும் இந்த மானுட உலகத்தில் அறியப்பட்டுள்ளது. இவற்றை முதலில் தனது மகனுக்கு கற்றுக் கொடுத்தார் அதன்பிறகு தனது சீடர்களுக்கு கற்றுக் கொடுத்தார். வியாசரால் மகாபாரதம் எழுதப்பட்ட பல ஆண்டுகளுக்குப் பின்னர் அவருடைய சீடரான வைசம்பாயனர் என்பவரால் சனமேசயன் என்னும் அரசனுக்குச் சொல்லப்பட்டது. இது மேலும் பல ஆண்டுகள் கடந்த பின்னர் கதை சொல்லுபவரான உக்கிரசிரவஸ் என்பவரால் நைமிசாரண்யம் எனும் காட்டில் வாழும் முனிவர்கள் குழுவொன்றுக்குச் சொல்லப்பட்டது.
குரு வம்சத்தினருக்கு வியாசர் பாட்டனார் ஆகின்றார். நல்லவர்கள் சிலவேளைகளில் அறியாமல் தீய நெறியில் சென்று அகப்பட்டுக் கொள்வார்கள் அப்போது வியாசர் தங்குதடையின்றி அவர்கள் முன்னிலையில் தோன்றி அவர்களை நல்வழியில் நடத்துவார். மகாபாரதத்தில் ஒரு பாத்திரமாகவும் வியாசர் வருகிறார். தர்மர் நாடிழந்து, துன்பப்பட்டு, நம்பிக்கை இழந்திருந்த காலத்தில் அவரையும் விட கஷ்டப்பட்ட நளதமயந்தி அரிச்சந்திரன் கதைகளை எடுத்துச் சொல்லி நம்பிக்கையூட்டினார் வியாசர். சத்தியவான் சாவித்திரியின் கதையை எடுத்துச் சொல்லி ஒரு பெண்ணே எமனை எதிர்த்து ஜெயித்திருக்கும் போது உன்னால் கவுரவர்களை வெல்ல முடியாதா? என்று கேட்டார். துன்பங்களை எதிர்த்து வெல்ல நமக்கு நம்பிக்கையூட்டும் கருத்துக்களை அளித்திருக்கின்றார்.
மகாபாரதம் நான்கு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
ஆத்ய பஞ்சகம்: ஆதி, சபா, ஆர்ண்ய, விராட மற்றும் உத்யோக ஆகிய 5 பர்வங்கள்.
யுத்த பஞ்சகம்: பீஷ்ம, துரோண, கர்ண, சல்ய மற்றும் செளப்திக ஆகிய போர் நிகழ்ச்சிகளை விவரிக்கும் 5 பர்வங்கள்.
சாந்தி த்ரையம்: ஸ்த்ரீ, சாந்தி மற்றும் அனுசாஸன் ஆகிய அமைதி திரும்பியதை விவரிக்கும் 3 பர்வங்கள்.
அந்த்ய பஞ்சகம்: அஸ்வமேதிக, ஆச்ரமவாஸிக, மெளஸல, மஹாப்ரஸ்தானிக மற்றும் ஸ்வர்க்காரோஹண ஆகிய இறுதி நிகழ்ச்சிகளை விவரிக்கும் 5 பர்வங்கள்.
மகாபாரதத்தின் 4 பாகங்கள் 18 பர்வங்களாக பிரிக்கப்பட்டுள்ளது
1. ஆதி பருவம்: நைமிசக் காட்டில் முனிவர்களுக்கு சௌதி மகாபாரதத்தைச் சொல்லியது பற்றியும், வைசம்பாயனரால் முன்னர் இக்கதை சனமேசயனுக்குச் சொல்லப்பட்டது பற்றியும் இப் பருவத்தில் விளக்கப்படுகிறது. பரத இனத்தின் வரலாறு பற்றி விளக்கமாகக் கூறும் இப்பருவம், பிருகு இனத்தின் வரலாற்றையும் கூறுகிறது. குரு இளவரசர்களின் பிறப்பு அவர்களது இளமைக்காலம் என்பனவும் இப் பருவத்தில் கூறப்பட்டுள்ளது.
2. சபா பருவம்: இந்திரப்பிரஸ்தத்தில் மயன் மாளிகை அமைத்தல், அரண்மனை வாழ்க்கை, தருமன் இராஜசூய யாகம் செய்தல் என்பன இப் பருவத்தில் சொல்லப்படுகின்றன. அத்துடன், தருமன் சூதுவிளையாட்டில் ஈடுபட்டு இறுதியில் நாடிழந்து காட்டில் வாழச் செல்வதும் இப் பருவத்தில் அடங்குகின்றன.
3. ஆரண்யக பருவம்: பாண்டவர்களின் 12 ஆண்டுக்காலக் காட்டு வாழ்கை பற்றிய விபரங்களைத் தருகிறது.
4. விராட பருவம்: பாண்டவர்கள், மறைந்து விராட நாட்டில் வாழ்ந்த ஓராண்டு கால நிகழ்வுகளைக் கூறுவது.
5. உத்யோக பருவம்: கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே அமைதி ஏற்படுத்த எடுத்த முயற்சிகளையும் அம்முயற்சிகள் தோல்வியுற்ற பின்னர் இடம்பெற்ற போருக்கான நடவடிக்கைகள் பற்றியும் எடுத்தாள்கிறது.
6. பீஷ்ம பருவம்: இப்பருவத்தில் தான் பகவத் கீதை கிருஷ்ணரால் அருச்சுனனுக்கு அருளப்பட்டது. பீஷ்மர் கௌரவர்களின் தளபதியாக இருந்து நடத்திய போரின் முதற்பகுதியையும் அவர் அம்புப் படுக்கையில் விழுவதையும் இது விவரிக்கிறது.
7. துரோண பருவம்: துரோணரின் தலைமையில் போர் தொடர்வதை இப் பர்வம் விவரிக்கின்றது. போரைப் பொறுத்தவரை இதுவே முக்கியமான பர்வமாகும். இரு பக்கங்களையும் சேர்ந்த பெரிய வீரர்கள் பலர் இப் பர்வத்தின் முடிவில் இறந்துவிடுகின்றனர்.
8. கர்ண பருவம்: கர்ணனைத் தளபதியாகக் கொண்டு போர் தொடர்வது விவரிக்கப்படுகின்றது.
9. சல்லிய பருவம்: சல்லியனைத் தளபதியாகக் கொண்டு இடம் பெற்ற இறுதிநாள் போர் இப் பர்வத்தில் கூறப்படுகின்றது. இதில் சரஸ்வதி நதிக்கரையில் பலராமனின் யாத்திரையையும் போரில் துரியோதனனுக்கும் பீமனுக்கும் இடையில் நடைபெற்ற இறுதிப் போரும் விளக்கப்படுகின்றது.
10. சௌப்திக பருவம்: அசுவத்தாமனும், கிருபனும், கிருதவர்மனும், போரில் எஞ்சிய பாண்டவப் படைகளில் பலரை அவர்கள் தூக்கத்தில் இருந்த போது கொன்றது பற்றி இப் பர்வத்தில் கூறப்பட்டுள்ளது. பாண்டவர் பக்கத்தில் எழுவரும், கௌரவர் பக்கத்தில் மூவரும் மட்டுமே போரின் இறுதியில் எஞ்சினர்.
11. ஸ்திரீ பருவம்: காந்தாரி, குந்தி முதலிய குரு மற்றும் பாண்டவர் பக்கங்களைச் சேர்ந்த பெண்கள் துயரப் படுவது கூறப்படுகின்றது.
12. சாந்தி பருவம்: அஸ்தினாபுரத்தின் அரசனாகத் தருமருக்கு முடிசூட்டுவதும் புதிய அரசனுக்கு சமூகம், பொருளியல், அரசியல் ஆகியவை தொடர்பில் பீஷ்மர் வழங்கிய அறிவுரைகளும் இப் பர்வத்தில் அடங்கியுள்ளன. மகாபாரதத்தின் மிகவும் நீளமான பர்வம் இது.
13. அனுசாசன பருவம்: பீஷ்மரின் இறுதி அறிவுரைகள்.
14. அசுவமேத பருவம்: தருமர் அசுவமேத யாகம் செய்வதையும் அருச்சுனன் உலகைக் கைப்பற்றுவதையும் இது உள்ளடக்குகிறது. கண்ணனால் அருச்சுனனுக்குச் சொல்லப்பட்ட கீதையும் இதில் அடங்குகிறது.
15. ஆசிரமவாசிக பருவம்: திருதராட்டிரன், காந்தாரி, குந்திமற்றும் விதுரன் ஆகியோர் இமயமலையில் வனப்பிரஸ்தம்ஆச்சிரமத்தில் வாழ்ந்தபோது காட்டுத் தீக்கு இரையானது இப்பர்வத்தில் கூறப்படுகின்றது.
16. மௌசல பருவம்: யாதவர்கள் தங்களுக்குள் நிகழ்த்திய சண்டையில் அவர்கள் அழிந்து போனதை இப்பர்வம் கூறுகிறது.
17. மகாபிரஸ்தானிக பருவம்: தருமரும் அவரது உடன்பிறந்தோரும் நாடு முழுதும் பயணம் செய்து இறுதியில் இமயமலைக்குச் சென்றது அங்கே தருமர் தவிர்த்த ஏனையோர் இறந்து வீழ்வது ஆகிய நிகழ்ச்சிகள் இப் பர்வத்தில் இடம்பெறுகின்றன.
18. சுவர்க்க ஆரோஹன பருவம்: தருமரின் இறுதிப் பரீட்சையும் பாண்டவர்கள் சுவர்க்கம் செல்வதும் இதில் சொல்லப்படுகின்றன.
மகாபாரதம் தொடர்பான பல குறிப்புக்கள் கிமு நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் பாணினியின் அட்டாத்தியாயி என்னும் இலக்கண நூலிலும், அசுவலாயன கிருகசூத்திரம் என்னும் நூலிலும் காணப்படுகின்றன. தமிழ்நாட்டிலும் சங்க காலத்திலேயே மகாபாரதம் செல்வாக்குச் செலுத்தி இருந்தது. பாரதம் பாடிய பெருந்தேவனார் என்பவர் எட்டுத்தொகை நூல்கள் தொகுக்கப்பட்ட காலத்தில் பாரதத்தை தமிழ்ப்படுத்தினார். இவரின் காலமும் உறுதியாகத் தெரியாகவில்லை. இவர் தமிழ் மொழிப்படுத்திய பாரதமும் கிடைக்கவில்லை. பின்னர் தொண்டைமண்டலத்து திருமுனைப்பாடி நாட்டு சனியூரைச் சேர்ந்த வில்லிப்புத்தூரார் தனது புரவலரான வக்கபாகை வரபதியாட்கொண்டான் வேண்டிக் கொண்டதற்கு இணங்க பாரதத்தைப் பாடினார். வில்லிப்புத்தூரார் இயற்றிய பாரதத்தில் பத்துப் பருவங்களே (மொத்தப்பாடல்கள் 4350) இருக்கின்றன. மகாபாரதத்தின் பதினெட்டாம் நாள் போரின் இறுதியுடன் தர்மன் முடி சூட்டுதல், பாண்டவர் அரசாட்சி என்று முடித்து விடுகிறார். 14ஆம் நூற்றாண்டில் வில்லிபுத்தூராரால் உருவாக்கப்பட்ட வில்லிபாரதமும் 18ஆம் நூற்றாண்டில் நல்லாப்பிள்ளையால் உருவாக்கப்பட்ட நல்லாப்பிள்ளை பாரதமும் மட்டுமே முழுமையாகக் கிடைத்த பிரதிகள். பாரதியார் மகாபாரதத்தின் ஒரு பகுதியை பாஞ்சாலி சபதம் எனும் பெயரில் இயற்றினார். இதன் பின்னர் மகாபாரதத்தை வேறு சிலரும் உரைநடையில் மொழியாக்கம் செய்துள்ளனர். 1903 லிருந்து இருபத்தைந்து ஆண்டு காலம் தொடர்ந்து ம. வீ. இராமானுஜச்சாரியார் தலைமையில் பல வடமொழி தமிழ் மொழி வித்வான்களால் மொழிபெயர்க்கப்பட்டது. அதில் மகாபாரதம் 9000 பக்கங்களைக் கொண்ட நூல் 1930 களிலும் 1950 களிலும் 2008 லும் பதிப்பிக்கப்பட்டன. இராமகிருஷ்ண தபோவனத்தின் நிறுவனர் சுவாமி சித்பவானந்தர் அவர்கள் வியாசரைத் தழுவி மகாபாரதம் எழுதியுள்ளார்.