உடுப்பி | அருள்மிகு கிருஷ்ணர் திருக்கோயில் | Sri Krishna Temple | Udupi

உடுப்பி | அருள்மிகு கிருஷ்ணர் திருக்கோயில் | Sri Krishna Temple | Udupi
மூலவர் : கிருஷ்ணர்
தீர்த்தம் : மத்வ புஷ்கரிணி,
ஊர் : உடுப்பி
மாவட்டம் : உடுப்பி
மாநிலம் : கர்நாடகா

திருவிழா :

சித்திரை அட்சயதிரிதியையிலிருந்து வைகாசி பவுர்ணமி வரை வசந்த உற்சவம், ராம நவமி, கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி, கந்த சஷ்டி, மார்கழி மாதம் முழுவதும் பூஜை, நரசிம்ம ஜெயந்தி, மகாசிவராத்திரி.

இங்கு நடத்தப்படும் திருவிழாக்களிலேயே பிப்ரவரியில் நடத்தப்படும் "மத்வ நவமி' திருவிழா தான் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

ஸ்தல சிறப்பு:

இந்த ஸ்தல ஸ்ரீகிருஷ்ணர் ருக்மிணியால் பூஜிக்கப்பட்ட சாளக்கிராமத்தாலான திருமேனி ஆகும். உடுப்பி ஸ்ரீகிருஷ்ணர் கோயில் கர்நாடக மாநிலம் உடுப்பி எனும் நகரில் அமைந்துள்ளது. இத்தலத்தின் மூலவர் ஸ்ரீகிருஷ்ணர். இக்கோயிலில் மத்வ புஷ்கரிணி எனும் தீர்த்தமுள்ளது. சந்திரன் தனது மனைவிகளான இருபத்து ஏழு நட்சத்திரங்களுடன் ஸ்ரீகிருஷ்ணரை வழிபட்ட ஸ்தலம்.

விஸ்வகர்மாவால் செய்யப்பட்டு துவாரகையில் ருக்மிணி தேவியால் வழிபடப்பட்டு துவாரகை கடலில் மூழ்கிய போது மூழ்கி பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து மத்வருக்குக் கிடைத்து, மத்வராலேயே பிரதிஷ்டை செய்யப்பட்ட பாலகிருஷ்ணரின் திருவுருவமே உடுப்பி கிருஷ்ணரின் கோயிலில் உள்ளது.

சாபத்தால் தனது ஒளியையும் அழகையும் இழந்து வருந்திய சந்திரன், பெருமாளை நோக்கி உடுப்பியில் கடும் தவம் செய்து இழந்த ஒளியையும் அழகையும் திரும்பப் பெற்றார். அப்போது சந்திரன் நிர்மாணித்த திருக்குளம் ’சந்திர புஷ்கரணி’.

நட்சத்திரங்களின் அதிபதியான சந்திரன் தவம் புரிந்ததால் (உடு=சந்திரன்; பா=அதிபதி) உடுபா என்றும் பின்னர் அது மருவி உடுப்பி என்றும் ஆனது.

பொது தகவல்:

ஐந்து நிலை ராஜகோபுரம் உள்ள இக்கோயிலில் ஸ்ரீகிருஷ்ணர் மேற்கு பார்த்து அருளுகிறார். மேற்கு பார்த்த ஸ்ரீகிருஷ்ணரை தரிசிப்பது மிகவும் விசேஷம்.
இவரை தரிசிக்க தெற்குபார்த்த வாசல் வழியாக பக்தர்கள் செல்கின்றனர்.
கோயிலின் கிழக்கே மத்வாச்சாரியார் உண்டாக்கிய தீர்த்தக்குளம் உள்ளது. இது "மத்வ புஷ்கரிணி' எனப்படுகிறது. அதன் நடுவில் கருங்கல் மண்டபம் உள்ளது. குளத்தின் தென்மேற்கு மூலையில் பாகீரதி அம்மன் (கங்கா தேவி) தனி சன்னதியில் அருளுகிறாள்.

இந்த தீர்த்தம் க்ருதயுகத்தில் விரஜ தீர்த்தம், த்ரேதாயுகத்திலும் துவாபர யுகத்திலும் ஆனந்த சரோவர், கலியுகத்தில் மத்வசரோவர் என அழைக்கப்படுகிறது.

இங்கு காலை 4.30 - 5 மணிக்குள் நடத்தப்படும் நிர்மால்ய பூஜை இங்கு அதி சிறப்பு.
.
ஸ்ரீகிருஷ்ண மடத்தின் முதல் மடாதிபதி மத்வாச்சாரியார். மடப்பள்ளியின் வலதுபக்கம் உள்ள அறையில் ஸ்ரீகிருஷ்ணருக்கு பூஜைசெய்யும் "பாரியாய ஸ்வாமிகள்' அருளாசி வழங்குவார். பூஜைக்கு தேவைப்படும் 4 டன் சந்தனத்தை ஆண்டுதோறும் கர்நாடக அரசு கொடுத்து வருகிறது. ஸ்ரீகிருஷ்ணர் கோயிலுக்கு அருகிலேயே சந்தரமவுலீஸ்வரர், அனந்தேஸ்வரர் கோவில்கள் உள்ளன. கோவிலுக்குள் சிவனுக்கு தனி சன்னதியும், நவக்கிரஹ சன்னதியும் உள்ளது. பிரகாரத்தின் கடைசியில் ஆஞ்சநேயர் தனி சன்னதியில் அருளுகிறார். மண்டபத்தின் அருகே துளசி தோட்டமும், தீப ஸ்தம்பமும் உள்ளது. மதியமும், இரவும் அன்னதானம் நடக்கிறது. பிரம்மாண்டமான பசுமடம் கோயிலுக்குள் இருக்கிறது.

பிரார்த்தனை

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

நேர்த்திக்கடன் :

நேர்த்திக்கடனாக துலாபாரம், கோதானம், ரத உற்சவம் செய்யப்படுகிறது.

ஸ்தல பெருமை :

பெயர்க்காரணம் : "உடு' என்றால் நட்சத்திரம். "பா' என்றால் தலைவன். "உடுபா' என்பதே மருவி "உடுப்பி' ஆனது.

சந்திரன் தனக்கு ஏற்பட்ட தோஷத்திற்காக 27 நட்சத்திரங்களுடன் இத்தல கிருஷ்ணனை வழிபட்டு சாபம் நீங்க பெற்றான்.

எனவே இங்குள்ள ஸ்ரீகிருஷ்ணர் நட்சத்திரங்களின் தலைவனாகவும், கிரகங்களின் நாயகனாகவும் கருதப்படுகிறார்.

மத்வாச்சாரியார் பிரதிஷ்டை : கி.பி.1238ல் நாராயணபட்டர், வேதவதி தம்பதியினருக்கு மத்வாச்சாரியார் மகனாக அவதரித்தார்.

இவர் திரேதா யுகத்தில் ஹனுமானாக பிறந்தார். துவாபர யுகத்தில் பீமனாக பிறந்தார் கலியுகத்தில் இவரே மத்வராக பிறந்தார். மத்வர்‌ என்றால் வெல்ல முடியாதவர் என்று பொருள். வாழும் காலத்தில் பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினார். இவர் வழி வந்தவரே ஸ்ரீ ராகவேந்த்ர தீர்த்தர். இவரது இயற்பெயர் வாசுதேவன். இவருக்கு 8 வயதாகும் போது உபநயனம் செய்யப்பட்டது. த்வைதம் (இறைவன் வேறு; மனிதன் வேறு) என்ற கொள்கையை இந்த உலகிற்கு வழங்கியவர். 79 வயது வரை வாழ்ந்த இவர் கி.பி. 1317ல் இறைவனுடன் பத்ரிகாஸ்ரமத்தில் விஷ்ணுவுடன் கலந்தார். இவரது காலத்திற்கு பின்னரே இக்கோவில் மிகவும் பிரபலமானது. ஒருமுறை இந்த விக்ரஹத்தை படகோட்டி ஒருவன் கடல் வழியாக எடுத்து வரும்போது, புயல் கடுமையாக வீசியது. அந்த இடத்தில் அமர்ந்திருந்த மத்வாச்சாரியார் இதைக்கண்டார். புயலை அமைதியாக்கி ஸ்ரீகிருஷ்ணரை மீட்டு 4 மைல் தூரம் பாடல்கள் பாடிக்கொண்டே இத்தலம் வந்து பிரதிஷ்டை செய்தார். இவர் பாடிய பாடல்கள் "துவாதச ஸ்தோத்திரம்' எனப்படுகிறது. இன்றும் இந்த பாடல்கள் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலில் பாடப்படுகிறது. ஸ்ரீகிருஷ்ணருக்கு இவரால் நியமிக்கப்பட்ட பால சன்னியாசிகள் பூஜை செய்தனர்.

கிருஷ்ண தரிசனம் : மூலஸ்தானத்தின் கிழக்கு கதவு பூட்டியே இருக்கிறது.

விஜயதசமி போன்ற விசேஷ நாட்களில் மட்டுமே இந்த கதவு திறக்கப்படுகிறது. இதன் அருகே உள்ள மற்றொரு வாசல் வழியாகத்தான் பூஜைசெய்யும் மடாதிபதிகள் செல்கின்றனர். ஸ்ரீகிருஷ்ணரை 9 துவாரங்கள் உள்ள பல்கணி (ஜன்னல் போன்ற அமைப்பு) வழியாகத்தான் தரிசிக்க முடியும். வெள்ளியால் ஆன இந்த துவாரத்தை "நவக்கிரஹ துவாரம்' என்கின்றனர். இதில் ஸ்ரீகிருஷ்ணரின் 24 வகையான உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இதன் முன்புள்ள மண்டபம் தீர்த்த மண்டபம் எனப்படுகிறது. இங்கு தான் தினமும் இரவு சாமர பூஜை, மண்டல பூஜை நடக்கிறது. தீர்த்த மண்டபத்திலுள்ள கருடன் அயோத்தியிலிருந்து "வதிராஜ தீர்த்தர்' என்பவரால் கொண்டுவரப்பட்டது.

அஷ்டமடம் : மத்வாச்சாரியார் தனக்கு பின் கிருஷ்ணருக்கு பூஜைசெய்ய கிருஷ்ணபூர மடம், சீரூர் மடம், காணியூர் மடம், சோடே மடம், பாலிமர் மடம், அடாமர் மடம், பேஜாவர் மடம், புத்திகே மடம் என்ற 8 மடங்களை ஸ்தாபித்தார். இவை அஷ்ட மடங்கள் என அழைக்கப்படுகின்றன.

இந்த மடங்களை சேர்ந்தவர்கள் தான் கிருஷ்ணருக்கு பூஜை செய்து வருகின்றனர். இதில் முக்கியமானது கிருஷ்ணபூர மடம். இந்த மடத்தில் தான் ஸ்ரீகிருஷ்ணரின் கோவில் உள்ளது. இங்குள்ள மத்வாச்சாரியாரின் கையெழுத்துப் பிரதிக்கு இன்றும் பூஜை நடக்கிறது. ஒளிவடிவில் அருளாசி : மூலஸ்தானத்தை சுற்றியுள்ள சுவர் முழுவதும் எண்ணெய் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசி, தீபாவளி உள்ளிட்ட விசேஷ நாட்களில் இந்த விளக்குகள் ஏற்றப்படும்.

ஸ்ரீகிருஷ்ணர் அருள்பாலிக்கும் மூலஸ்தானத்தின் வடக்குப் பக்கம் மத்வாச்சாரியாரின் அறை உள்ளது. இங்கு அவர் ஒளி வடிவில் அருள்பாலிப்பது அற்புதமாகும்.

கங்கை கலக்கும் புண்ணிய குளம் : இங்குள்ள மத்வ புஷ்கரணியில் ஆண்டுக்கு ஒருமுறை கங்கை தீர்த்தம் கலப்பதாக ஐதீகம். இதிலிருந்து தான் ஸ்ரீகிருஷ்ணருக்கு தினமும் அபிஷேகதீர்த்தம் எடுக்கப்படுகிறது. இந்த தீர்த்தத்தின் பெயரைச் சொன்னாலே மிகவும் புண்ணியம் கிடைக்கும். குறிப்பாக மார்கழி மாதத்தில் நேரில் சென்று, தீர்த்தம் தெளித்து வந்தால் பன்மடங்கு புண்ணியம் கிடைக்கும்.
ஸ்தல வரலாறு :
உடுப்பி ஸ்ரீகிருஷ்ணர் ருக்மிணியால் பூஜிக்கப்பட்டவர். ஒருமுறை ருக்மிணிக்கு பகவான் ஸ்ரீகிருஷ்ணர், பாலகனாக இருந்த போது எப்படி இருந்தார் என்று பார்க்க ஆசை ஏற்பட்டது. தேவசிற்பியான விஸ்வகர்மாவை அழைத்து தன் ஆசையைக் கூறினாள். ருக்மிணியின் ஆசையை நிறைவேற்ற சாளக்கிராம கல்லில், வலது கையில் தயிர் மத்தும், இடது கையில் வெண்ணெயும் வைத்த நிலையில் பாலகிருஷ்ண விக்ரஹத்தை உருவாக்கினார் விஸ்வகர்மா. ருக்மிணி அதன் அழகில் மயங்கி தன்னுடனேயே வைத்து பூஜித்து வந்தாள். ருக்மிணிக்கு பின் பாண்டவர்களுள் ஒருவரான அர்ஜுனன் இவரை பூஜித்தார். இவருக்கு பின் இந்த விக்ரஹம் கோபி சந்தனத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டது.
சிறப்பம்சம் :
ஸ்ரீகிருஷ்ணர் ருக்மிணியால் பூஜிக்கப்பட்ட சாளக்கிராம த்தாலான திருமேனி ஆகும். எத்தனையோ தாசானு தாசர்கள் பாடிய புகழ்பெற்ற ஸ்தலம் உடுப்பி ஸ்ரீகிருஷ்ணர் கோவில் ஒரு முறை பாருங்கள்.

நடை திறக்கும் நேரம்:
காலை 4.30 மணியில் இருந்து இரவு 9 மணி வரை தொடர்ந்து நடை திறந்திருக்கும்.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!