பெருமாள் தாடையில் பச்சைக் கற்பூரம் வைப்பதன் காரணம்

திருவரங்கத்தில் திருவரங்கப் பெருமானின் கைங்கர்யத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட ஶ்ரீராமாநுஜருக்கு, நீண்டகாலமாகவே ஒரு குறை இருந்துவந்தது. வேங்கடமுடையானுக்கு ஒரு நந்தவனமும் தபோவனமும் அமைக்க முடியவில்லையே என்பது தான் அவருடைய ஆதங்கம்.

ராமானுஜர் ஒரு நாள், தமது சீடர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது 'உங்களில் எவர் வேங்கடவனின் கைங்கர்யத்துக்கு அனுதினமும் மாலை தயாரித்துத் தரும் வேலையை எடுத்துக் கொள்ளப் போகிறீர் ?' எனக் கேட்டார். எவரும் வாய் திறக்கவில்லை.

'குருவின் மனக்குறையைப் போக்குபவர் உங்களில் எவருமில்லையா?' என்ற மறுபடியும் ஆச்சர்யத்துடன் பார்த்தார். அப்போது ஒற்றை ஆளாக எழுந்து நின்றார் அனந்தாழ்வான்,

அனந்தாழ்வானை வாரி அணைத்து உச்சி முகர்ந்து திருமலைக்கு அனுப்பி வைத்தார். ஏழுமலை ஆண்டவனுக்கு 'திருமாலை சேவை' செய்யும்பேறு தனக்குக் கிடைத்த மகிழ்ச்சியோடு தனது மனைவியுடன் அவரும் திருமலைக்கு வந்து சேர்ந்தார்.

முன்னதாகவே அங்கே வந்து சேர்ந்திருந்த ராமாநுஜரின் தாய் மாமனான, திருமலை நம்பி அவரை இன்முகத்துடன் வரவேற்று உபசரித்தார். அனந்தாழ்வா, உனக்கு குடிசைபோட்டுத் தருகிறேன். மேலும் நந்தவனம் அமைக்கவும் ஏற்பாடு செய்கிறேன்.

அனந்தாழ்வார் நந்தவனம் அமைக்க மண்வெட்டியால் வெட்டி நிலத்தைப் பண்படுத்தி பூச்செடிகளை நட்டார். அந்த நந்தவனத்துக்கு தமது குருநாதரின் திருப்பெயரே நிலைக்கும்படி 'ராமாநுஜ நந்தவனம்' என்று பெயரும் வைத்தார். இப்போதும் அந்த நந்தவனம் அதே பெயரிலேயே அழைக்கப்படுகிறது.

கோடைக் காலத்தின் தண்ணீர்த் தேவைக்காக குளம் வெட்டி அதில் தண்ணீரைத் தேக்க முடிவுசெய்தார். குளம் உருவாக்கும் பணியில் மனைவியும் சேர்ந்துகொண்டார். மண்ணை ஒரு புறமிருந்து மறுபக்கம் கொண்டு சென்று மனைவி கொட்டிவிட்டு வந்தார். அப்போது அவர் கருவுற்று இருந்தார். ஒரு கர்ப்பிணிப் பெண் மண் சுமந்து செல்வதைப் பார்த்த ஒரு சிறுவன், அவருக்குத் தானும் உதவுவதாகக் கூறினான். தனக்குக் கூலி எதுவும் வேண்டாம் என்று சிறுவன் கூறியும், அனந்தாழ்வான் மறுத்துவிட்டார்.

பெருமாளின் கைங்கர்யத்தில் தானும் தன் மனைவியும் மட்டுமே ஈடுபடவேண்டும் என்று நினைத்தார். அதனாலேயே அந்தச் சிறுவனை தன் திருப்பணியில் சேர்த்துக்கொள்ளவில்லை. அவர் போகச் சொன்ன சிறுவன் போகாமல், அந்தப்பக்கத்தில் கூடையுடன் நின்றிருந்தான்.

''தாயே, நான் மண் சுமந்தால்தானே அவர் கோபப்படுவார். அவருக்குத் தெரியாமல் உங்களுக்கு உதவுகிறேன். இந்த வளைவுக்கு இந்தப் பக்கம் நான் சுமக்கிறேன். அந்தப்பக்கம் நீங்கள் சுமந்து வாருங்கள்'' என்றான் சிறுவன். சிறுவனின் மொழியைக் கேட்ட பிறகு அவளால் மறுக்க இயலவில்லை. 'சரி, தம்பி' என்று கூடையை மாற்றிக் கொடுத்தாள். சற்றுநேரம் இப்படியே வேலை நடந்தது. திடீரென்று அனந்தாழ்வானுக்கு சந்தேகம் தோன்றியது. 'மண்ணைக் கொட்டிவிட்டு சீக்கிரம் சீக்கிரமாக வந்து விடுகிறாயே' என்று மனைவியைக் கேட்க, ''சீக்கிரமாகவே சென்று போட்டு விடுகிறேன் சிரமம் இல்லை''என்று பதில் சொல்லி சமாளித்தாள்.

சிறிது நேரம் சென்றதும், அனந்தாழ்வான் கரையைப் பார்க்க வந்தார். சிறுவன் கர்மசிரத்தையாக மண்ணைக் கொண்டு போய் கொட்டிக் கொண்டிருந்தான். இதனால், கோபம் தலைக்கேற கடப்பாரையால் சிறுவனின் கீழ்த்தாடையில் அடித்தார். சிறுவனின் தாடையில் இருந்து இரத்தம் கொட்டியது. அந்தச் சிறுவன் ஓடிப் போய்விட்டான்.

மறுநாள் காலை திருமலை பெருமாளுக்கு அர்ச்சனைகள் செய்யவந்த அர்ச்சகர்கள் கதவைத் திறந்ததும் அலறினர். பெருமாளின் தாடையிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. 'அர்ச்சகரே பயப்பட வேண்டாம். அனந்தாழ்வாரை அழைத்து வாருங்கள்' என ஒரு அசரீரி கேட்டது.

உடனே அவரை அழைத்து வந்தனர். பெருமாள் தாடையில் இரத்தம் வடிவதை அனந்தாழ்வான் கண்டார். ஆனால், அவருக்கு மட்டும், தான் மண்சுமந்த கோலத்தைக் காண்பித்தார் பெருமாள். ''சுவாமி, என்னை மன்னித்து விடுங்கள். சிறுவனாக வந்தது தாங்கள்தான் என்று தெரியாது. சுவாமி என்னை மன்னித்தருள்க'' என்று விழுந்து வணங்கினார் அனந்தாழ்வான்.

'அனந்தாழ்வா, நீ மலர்மாலை நேர்த்தியாகக் தொடுத்து அணிவிப்பதில் எனக்கு மகிழ்ச்சி. ஆனால், கர்ப்பிணியான உன் மனைவி மண் சுமப்பதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. என் பக்தை கஷ்டப்படுவதைக் கண்டு வேடிக்கை பார்க்க என் மனம் எப்படி இடம் கொடுக்கும்''என்று அசரீரியாகக் கேட்டார்.

'சரி இரத்தம் வழியாமல் இருக்க என்ன செய்வது?' என்று அர்ச்சகர்கள் குழம்பினர். 'சுவாமியின் தாடையில் பச்சைக் கற்பூரத்தை வைத்து அழுத்துங்கள் இரத்தம் வழிவது நின்றுவிடும்' என்றார். அர்ச்சகர்களும் மூலவரின் கீழ்தாடையில் பச்சைக் கற்பூரத்தை வைக்க, இரத்தம் வழிந்தது நின்று போனது. இதை நினைவுபடுத்தும் விதமாகவே திருப்பதிப் பெருமாளின் தாடையில் பச்சைக் கற்பூரம் வைக்கும் நிகழ்ச்சி இன்றளவும் தொடர்கிறது.

திருப்பதி திருமலை வாசனை தரிசிக்கச் செல்லும்போது, பிரதான வாசலின் வலப் புறத்தில், இந்த கடப்பாரை தொங்குவதைப் பார்க்கலாம். இதுவரை பார்க்காதவர்கள் இனிமேல் செல்லும்போது கடப்பாரையை அவசியம் பாருங்கள்.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!