ஆனி மாதம் சிறப்புகள்

ஆனி மாதம் சிறப்புகள்
இந்துக்களின் முக்கிய மாதங்களின் ஒன்றான ஆனிமாதம் பிறந்துள்ளது. இந்துக்களின் வருட கணக்கில் மூன்றாவது மாதமாக ஆனி வருகிறது. இது “ஜேஷ்டா மாதம்” என்று அழைக்கப்படுகிறது. ஜேஷ்டா என்றால் பெரிய, மூத்த என்று பொருள்.

இம்மாதத்தின் நாட்களுக்குத்தான் நீண்ட பகல் பொழுது உள்ளது. சுமார் 12 மணி நேரம் 38 நிமிடங்கள் பகல் பொழுதாக அது நீடிக்கும் இதனால் அதனை பெரிய மாதம் மூத்த மாதம் என்றார்கள்.

உத்திராயணப் புண்ணிய காலத்தின் கடைசி மாதம் ஆனி. இது தேவர்களின் மாலைப் பொழுது என்கிறது சாஸ்திரம். ஆனிமாதம் என்பது இளவேனிற் காலம். கோடையின் தாக்கம் நீங்கி இதமான சூழல் உருவாகும் காலம், கோடை காலம் முடிந்து இளவேனிற்காலம் வருவதால் பக்தி வழிபாடுகளும் அதிகம் இம்மாதம் நடக்கும்

இம்மாதத்தில் ஆனி திருமஞ்சனம், ஜேஷ்டாபிஷேகம், அபரா ஏகாதசி, பீம ஏகாதசி, முப்பழத்திருவிழா, சாவித்திரி விரதம் போன்ற விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

பெரியாழ்வார், நாதமுனிகள் போன்ற ஆன்மீகப் பெரியோர்கள் இம்மாதத்தில் தோன்றியோர் ஆவர்.

ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதருக்கு ஆனி கேட்டை நட்சத்திரத்தில் அபிஷேகம் மற்றம் தைலக்காப்பு வைபவமும் நடைபெறும் . இதுவே ஜேஷ்டாபிஷேகம் என்று அழைக்கப்படுகிறது. கேட்டை நட்சத்திரத்திற்கு ஜேஷ்டா நட்சத்திரம் என்ற பெயர் உண்டு. எனவே இந்நட்சத்திர நாளில் நடைபெறும் அபிஷேகம் ஆதலால் இது ஜேஷ்டாபிஷேகம் என்று அழைக்கப்படுகிறது.

இவ் அபிஷேகத்திற்கு வழக்கமாக வடபுறத்தில் ஓடும் கொள்ளிடத்தில் நீர் எடுப்பதற்கு பதிலாக தென்புறத்தில் ஓடும் காவிரியில் புனித நீர் தங்கக் குடங்களில் எடுக்கப்பட்டு யானை மேல் வைத்து ஆழ்வார்களின் பாசுரங்களைப் பாடியபடி எடுத்து வந்து பெருமாளுக்கு அபிஷேகம் நடத்தப்படுவது மரபு பின் பெருமாளுக்கு அரிய மூலிகைகள் கலந்த தைலக் காப்பு இடப்படுகிறது. மறுநாள் பெரிய பாவாடை வைபவம் நடைபெறுகிறது. இந்நிகழ்வின் போது மா, பலா, வாழை, தேங்காய் துருவல், நெய் ஆகியவற்றைச் சேர்த்து பிரசாதமாக பெருமாளுக்கு படைக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமையில் தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகமும், அடுத்த நாள் பெரிய பாவாடை வைபவமும் நடைபெறுகிறது. தேவர்களின் தலைவனான இந்திரன் தன்னுடைய பணி சிறக்க ஜேஷ்டாபிஷேகம் செய்து வழிபட்டதாகக் கருதப்படுகிறது.

இந்த கேட்டை நட்சத்திரத்திற்கு உரிய தேவதை இந்திரன். தலைமைப் பொறுப்பினை தக்க வைத்துக் கொள்ளவும், தலைமைப் பொறுப்பினை நிர்வகிக்கின்ற திறனை புதுப்பித்துக் கொள்ளவும், இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுகின்ற நாள், இந்த ஆனி மாதத்தில் வருகின்ற கேட்டை நட்சத்திர நாள் ஆகும்.

ஆனிமாதம் தேய்பிறை அன்று வரும் ஏகாதசி அபரா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.

அன்றைய தினம் பெருமாளை திரிவிக்ரமனாக மக்கள் வழிபடுகின்றனர். இவ்வழிபாடு செய்வதன் மூலம் பிரம்மஹத்தி தோசம், பொய்சாட்சி, குருநிந்தனை ஆகியவற்றால் ஏற்பட்ட பாவம் நீங்கும். ஆனிமாதம் வளர்பிறை அன்று வரும் ஏகாதசி நிர்ஜலா ஏகாதசி என்றழைக்கப்படுகிறது. இவ்விரதத்தில் போது தண்ணீர் அருந்தக் கூடாது. ‘நிர்’ என்றால் ‘இல்லை’,’ ஜலா’ என்றால் ‘தண்ணீர்’. எனவே இவ்விரதம் தண்ணீர் அருந்தாமல் கடைப்பிடிக்கப்படுகிறது.

மகாபாரதத்தில் ஒரு காட்சி உண்டு எல்லா ஏகாதசிகளிலும் விரதம் இருந்தால் கிடைக்கும் விரதபலனை நிர்ஜலா ஏகாதசியால் விரதம் இருந்து பெறலாம் என வியாசர் மகாபாரதத்தில் பீமனிடம் கூறினார். பீமனும் தண்ணீர் கூட அருந்தாமல் இவ்விரதமுறையைப் பின்பற்றி பலன் பெற்றதாக மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது. இவ்விரதமுறை பீமபூஜை என்று அழைக்கப்படுகிறது. இவ்விரதத்தில் ஆழ்மனதில் இறை தியானத்தை பீமன் மேற்கொண்டார்.

மேலும் ஏகாதசி முடிந்து துவாதசி அன்றே உணவினை உண்டார் என்பதால் பீமன் மேற்கொண்ட விரத நெறிகளான தண்ணீர் கூட அருந்தாமல் ஆழ்மனதில் இறை சிந்தனை கொண்டு இன்றளவும் இவ்விரதம் பின்பற்றப்படுகிறது.

ஆனி பௌர்ணமி அன்று சாவித்திரி விரதம் மேற் கொள்ளப்படுகிறது. பிரம்மனின் மனைவியான சாவித்திரி தேவியை நினைத்து விரதம் மேற்கொள்ளப்படுகிறது. இவ்விரதமுறையை மேற்கொள்வதால் பெண்கள் தங்களுக்கு மாங்கல்யபலம், ஐஸ்வரியம், நீண்ட ஆயுள் கிடைப்பதாக கருதுகின்றனர்.

இப்படியாக ஏகபட்ட வழிபாட்டு சிறப்பும், முக்கியமான பண்டிகைகளும், இந்துமதத்தின் பெரும் அடையாளங்களும், அவர்களுக்கெல்லாம் பிதாமகனான வியாசரின் குருபவுர்ணமியும் இம்மாதத்தில் வர இருப்பதால் இந்துமக்கள் இம்மாதத்தை பெரும் உற்சாகமாக வரவேற்கின்றனர்

அப்படியே எல்லா வளமும் நலமும் எல்லாருக்கும் கிடைக்கட்டும், இத்தேசம் எல்லா வளத்தையும் நலத்தையும் பலத்தையும் அடையட்டும்.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!