ஸ்ரீ பார்த்தசாரதி கோயில் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தக் கோவில் பல விதங்களிலும் புதுப்பிக்கப்படும் இந்தச் சமயத்தில் இந்தக் கோயிலைப் பற்றிய சில முக்கியமான தகவல்கள் இங்கே தரப்படுகின்றன:

ஒன்பது அடி

108 வைணவ திவ்ய தேசங்களுக்குள் 61-ம் திவ்ய தேசமாகப் போற்றப்படும் பார்த்தசாரதி கோயில் மூலவர் ஒன்பது அடி உயரமானவர்.

வெண் மீசை

வேறு எந்தக் கோயிலிலும் இல்லாத அதிசயமாகப் பெருமாள் இங்கே வெண்மீசைக்காரராகக் காணப்படுகிறார்.

உற்சவர் தந்த பெயர்

மூலவர் பெயர் வேங்கடகிருஷ்ணன் என்றாலும் உற்சவர் பார்த்தசாரதியின் பெயரிலேயே கோயில் அழைக்கப்படுகிறது. பார்த்தசாரதி என்று சொன்னாலே திருவல்லிக்கேணி கோயில் பெருமாளே பக்தர்களால் நினைவு கொள்ளப்படுகிறார்.

முக வடுக்கள்

இந்தக் கோயிலில் உள்ள பார்த்தசாரதியின் முகத்தில் வடுக்கள் காணப்படும். பார்த்தனுக்குச் சாரதியாய்த் தேர் ஓட்டியபோது எதிரிகளின் அம்புகள் பட்டதால் ஏற்பட்ட காயங்களின் தழும்புகள் அவை. இந்த வடுக்கள் நீங்க வேண்டும் என்பதற்காகவே பெருமாளுக்கான நிவேதனத்தில் பெருமளவு நெய் சேர்க்கப்படுகிறதாம்.

தனிச் சன்னிதி

பிருகு முனிவரின் மகளாகப் பிறந்த வேதவல்லித் தாயாருக்கு இந்தக் கோயிலில் தனிச் சன்னிதி உள்ளது. பிருகு முனிவரின் வேண்டுதலுக்கிணங்க அப்படி அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. வேதவல்லித் தாயார் தனிச் சன்னிதியில் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறாள்.

இரண்டு கரங்கள்

பொதுவாக நான்கு கரங்களுடன் காட்சி தரும் பெருமாள், இங்கே இரண்டு கரங்களுடன் காட்சி அளிக்கிறார். மனித வடிவில் கிருஷ்ணனாகப் பிறந்ததால் இரண்டு கைகள் மட்டுமே அவருக்கு உண்டு.

பஞ்ச மூர்த்தி ஸ்தலம்

பிரதான மூலஸ்தானத்தில் வேங்கடகிருஷ்ணர், முன்மண்டபத்தில் ரங்கநாதர் மற்றும் ராமபிரான், பிரகாரத்தில் கஜேந்திர வரதர் மற்றும் யோக நரசிம்மர் தனித்தனி சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர். அதனால் இத்தலம் ஐந்து மூலவர் ஸ்தலம் அல்லது பஞ்ச மூர்த்தி ஸ்தலம் என்று அழைக்கப்படுகிறது. ரங்கநாதர் சந்நிதியில் சுவாமியின் தலைக்கு அருகில் வராகரும், கால் அருகில் நரசிம்மரும் உள்ளனர்.

யோக நரசிம்மரே இத்தலத்தில் முதல் மூர்த்தியாவார். அத்ரி மகரிஷிக்கு காட்சியளித்த நரசிம்மரான இவருக்கே காலையில் முதல் பூஜை நடைபெறுகிறது. யோக நிலையில் இவர் இருப்பதால், இவரது சந்நிதிகளில் உள்ள மணிகளில் மட்டும் சப்தம் எழுப்பும் நாக்குகள் இல்லை.

இத்தலத்தில், கஜேந்திரனுக்கு மோட்சம் அருளிய கஜேந்திர வரதர் (மூலவர்) கருடாழ்வார் மேல் நித்ய வாசம் செய்வதால், இத்தலத்தில் அனைத்து நாட்களும் கருடசேவை வைபவத்தைக் காண முடியும்.

இங்குள்ள மூலவர் திருமேனியே கீதையில் பகவானின் சொரூபம் என்று கருதப்படுகிறது. நின்றான் கோலத்துக்கு வேங்கடகிருஷ்ணர், அமர்ந்தான் கோலத்துக்கு தெள்ளியசிங்கர் என்றழைக்கப்படும் நரசிம்மர், கிடந்தான் கோலத்துக்கு மன்னாதர் என்றழைக்கப்படும் ரங்கநாதர் - இந்த மூன்று நிலைகளுமே வீரம், யோகம், போகம் ஆகியவற்றை பக்தர்களுக்கு அருள்வதாக அமைந்துள்ளன.

ஞானமும் வளமும்

பார்த்தசாரதி திருக்கோயிலில் குடி கொண்டுள்ள நரசிம்மரை வணங்கினால் கல்வி கேள்விகளில் சிறந்த ஞானம் கிடைக்கும் என்பது ஐதீகம். பார்த்தசாரதி பெருமாளை வேண்டினால் கல்யாணம், குழந்தை, குடும்ப ஐஸ்வர்யம் ஆகிய வரங்களை அள்ளி அருளுபவர் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது.

சர்க்கரைப் பொங்கல்

இக்கோயிலில் சர்க்கரைப் பொங்கல் பிரசித்தி பெற்ற பிரசாதம். 2 கிலோ அரிசியில் சக்கரைப் பொங்கல் தயாரிக்கப்பட்டால், 1 கிலோ 400 கிராம் முந்திரிப் பருப்பும் 700 கிராம் நெய்யும் சேர்க்கப்படுகின்றன.

கொண்டல் வண்ணனின் கொண்டைகள்

மகாபாரதப் போரில் அர்ச்சுனனுக்கு தேர் ஓட்டியது மட்டுமல்லாமல் பாஞ்ச சன்னியம் என்ற தனது சங்கை எடுத்து ஊதி போரைத் தொடக்கிவைத்தவர் கிருஷ்ணர். போர்க்களத்தில் பெரிய மீசை வைத்துக் கொண்டு காட்சி அளிக்கிறாராம் பார்த்தசாரதி. இப்படி மீசையுடன் காட்சியளிக் கும் பார்த்தசாரதியை வேறு எங்கும் பார்க்க முடியாது. அதுபோலவே பிற திருத்தலங்களில் காணக் கிடைக்காத காட்சியாகக் குடும்ப சமேதராக இங்கு காட்சி அளிக்கிறார். மேலும் கஜேந்திர வரதர் கருடர் மீது காட்சி அளிப்பதால் `நித்திய கருட சேவை பெருமாள்` என்று அழைக்கப்படுகிறார்.

பார்த்தசாரதி கோயிலில் பிரதான உற்சவங்களாக பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி உற்சவம் ஆகியவை கொண்டாடப்படுகின்றன. இவற்றைத் தவிர ஆண்டு முழுவதும் தினந்தோறும் பார்த்தசாரதிப் பெருமாள் பல பூஜைகளால் கொண்டாடப்படுகிறார். இப்பெருமாளை மங்களாசாசனம் செய்த ஆழ்வார்கள் பேயாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசை ஆழ்வார் ஆகியோர் ஆவர்.