ஏழு பிறவிகள் என்பது உண்மையா?
பல பிறவிகளைத் தாண்டி அறிவை எட்டியவன் என்னுடன் இணை கிறான். என்கிறான் கண்ணன். அதேபோல், ‘பல பிறவிகளைத் தாண்டி, தற்போது மனிதனாகப் பிறந்த நான்...’ என்று சங்கல்பத்தின்போது சொல்வது உண்டு (கேனாபி புண்யகர்மவிசேஷண இதானீம்தனமானுஷ்யே).

‘பிறப்பு-இறப்பு; இறப்பு-பிறப்பு எனும் சங்கிலித் தொடரில் சிக்கித் தவிக்கும் மனிதனைப் பார்த்து, அதிலிருந்து விடுபட கோவிந்தனை நாடுக’ என்று பிரார்த்திக்கிறார் ஆதிசங்கரர்.

நமது செயல்பாடுகளால் நாம் சேமித்த பாவம் அல்லது புண்ணியம் இருக்கும் வரை, அதை அனுபவித்துத் தீர்க்க பிறவி எடுக்க நேரிடும். புண்ணியம் - பாவம் முற்றிலும் அகன்று விட்டால், பிறவி முடிந்துவிடும்.

ஆக, நமது செயல்பாடுகளே பிறவியின் எண்ணிக்கையை வரையறுக் கின்றன. ஆன்மிக வாசனையின்றி, உலகவியலில் வாழ்க்கையை இணைத் துக் கொண்டவன், பெரும்பாலும் துயரத்தையே சந்திக்க நேரிடும். இன்பத் தைச் சந்திக்க நேர்ந்தாலும் அந்த இன்பம் மின்னல் போல் மறைந்துவிடும். ஒருவேளை, அந்த இன்பம் தொடர்ந் தாலும், துயரத்திலேயே முற்றுப்பெறும். இந்த உண்மையை அறிந்த அறிஞர்கள், பிறவித் தளையைக் களையுமாறு பரிந்துரைப்பார்கள்.

ஏழு தலைமுறை என்பது ஒரு வம்சத்தின் (குலத்தின்) எல்லைக்கோடு. இதையே ’ஏழு பிறவிகள்’ என்று சொல்லும் வழக்கமும் உண்டு. பல பிறவிகள் எடுத்தாலும் ஒவ்வொரு பிறவியிலும் மனிதனாகவே பிறப்பான் என்று சொல்ல முடியாது. பாவ - புண்ணியத்துக்கு ஏற்ப விலங்கினமாகவும், ஊர்வனவாகவும், ஏன் தேவனாகவும்கூட பிறப்பு அமையும்.

ஸஹஸ்ர கவசன், கர்ணனாகப் பிறந்தான் என்கிறது புராணம். அதேபோல், சாபத்தின் காரணமாக மரமாகவும் பாம்பாகவும் பிறந்தவர்கள் பற்றிய தகவல்களும் புராணத்தில் உண்டு.

ஒருவன் ஒவ்வொரு பிறவியிலும் எப்படி இருப்பான் என்பதை அறிய இயலாது. பிறவியின் எண்ணிக்கையையும் வரையறுக்க இயலாது. நல்லவற்றைச் செய்து நல்லபடியாக வாழ்ந்தால் பிறவியில் இருந்து விடுபடலாம். கனவு காணும் வேளையில் அதை உண்மை என எண்ணும் மனம், விழித்தபிறகு அது பொய் என்பதை அறிந்துகொள்ளும்.

அதேபோல், உலகவியலைச் சுவைக்கும் வேளையில், அறியாமையில் இருப்பதால்... நீண்ட சுவையான வாழ்க்கையை உண்மை என்று எண்ணும். அறிவு வந்து அறியாமை விலகும்போது, நமது வாழ்க்கையே பொய் என்று தோன்றும். அப்போது பிறப்பு முடிந்து விடும்.