வீடுகளிலோ அல்லது கோவிலிலோ சாமி கும்பிடுகிற பொழுது, படையல் வைப்பது வழக்கம். அதில் நமக்குப் பிடித்தது, சாமிக்குப் பிடித்தது என எல்லாவற்றையும் செய்து வாழை இலையில் அடுக்கி வைப்போம். ஆனால் படைப்பதற்கென்று சில முறைகள் இருக்கின்றன. அதன்படி படைப்பது தான் கடவுளை மகிழ்விக்கும். அந்த படையல் முறையைப் பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.
படையல்
படையல்
வீடுகளில் அல்லது கோயில்களில் மதச் சடங்குகள் அல்லது பூஜைகள் செய்யும்போது தெய்வங்களுக்கு உணவை நைவேத்தியமாக வைப்பது இந்துக்களின்/இந்து தர்மத்தின் வழக்கமான நடைமுறையாகும். இந்த படையல் நைவேத்தியம் என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு மனிதனின் உண்மையான மொத்த நிலையை குறிக்கிறது. படையல் வைப்பது ஒரு பூஜையின் கடைசி படியாகும். ஒவ்வொரு நாளும் கடவுளுக்கு என்ன பிரசாதம் வைக்கப்பட வேண்டும் என்பது முன்னதாகவே தீர்மானிக்கப்படுகிறது. ஒவ்வொரு தெய்வத்திற்கும் சில பிடித்தமான உணவுகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதுவே நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது.
நைவேத்தியம் என்பது என்ன?
உதாரணமாக, பாயசம் அல்லது விஷ்ணுவுக்கு பால் பாயசமும், படைக்கப்படுகிறது. குறிப்பிட்ட உணவை குறிப்பிட்ட தெய்வத்திற்கு பிரசாதமாக சமர்ப்பிப்பதன் மூலம் நிறைய நல்ல பலன்களை பெற முடியும். படைத்த நைவேத்தியத்தை தெய்வங்கள் அதை அன்புடன் ஏற்றுக்கொண்ட பிறகு அது பிரசாதம் என்று அழைக்கப்படுகிறது. அதன் பிறகு அனைவரும் சிறு பங்காக எடுத்துக் கொள்கின்றனர். இந்த நைவேத்தியம் பிரசாதமாக அனைவருக்கும் பங்களிக்கப்பட்ட பிறகு, அதில் கடவுளின் சக்தி நிரம்பி அதை சாப்பிடும் அனைவருக்கும் நன்மை அளிப்பதாக நம்பப்படுகிறது. இந்த கட்டுரையில் நைவேத்தியம் படைப்பதன் ஆன்மீக முக்கியத்துவம் மற்றும் இந்த செயலின் பல்வேறு கோணங்களைப் பற்றிய தகவல்களை பற்றி அறிவோம்
எப்படி படைக்க வேண்டும்?
நைவேத்தியம் சமைக்கும்போது குறைந்த அளவு காரம், உப்பு மற்றும் எண்ணையைப் பயன்படுத்த வேண்டும். நெய் போன்ற சாத்வீக பொருட்களை நிறைய பயன்படுத்தலாம்.
நைவேத்தியத்தை படையல் போட வாழை இலையைப் பயன்படுத்த வேண்டும்.
கடவுளுக்காக தயாரிக்கப்பட்ட நைவேத்தியத்தில் உப்பை இலையில் பரிமாறக் கூடாது.
நைவேத்தியம் படைக்கப்படும் இலையை மூடி வைக்கவும்.
நைவேத்தியத்தை படைப்பதற்கு முன் இஷ்ட தெய்வத்தை பிரார்த்தனை செய்துக் கொண்டு கடவுள் முன்னால் தரையில் கோலமிட்டு அதன் பிறகு அந்த கோலத்தின் மீது நைவேத்தியம் அடங்கிய வாழை இலையை பரப்பி வாழை இலையின் காம்புப் பகுதி கடவுள் இருக்கும் திசையை நோக்கி இருக்கும்படியும் நுனிப்பகுதி உங்களை நோக்கி இருக்கும்படியும் வைக்கவும்.
நைவேத்தியத்தை படைக்கும்போது வாழை இலையை அல்லது பிரசாதத் தட்டைச் சுற்றிலும் வலமிருந்து இடமாக தண்ணீர் தெளிக்க வேண்டும். (இந்த செயல் மண்டலத்தை சுத்தி செய்தல் என்று அறியப்படுகிறது) தண்ணீரை இடமிருந்து வலமாக மீண்டும் தெளிக்கக்கூடாது.
தெய்வத்திற்கு நைவேத்தியம் படைத்தல்:
இரண்டு துளசி இலைகளுடன் சேர்த்து தண்ணீர் தெளித்து பரிமாறப்பட வேண்டும். ஒரு துளசி இலையை நைவேததியத்தின் மீது வைக்க வேண்டும். மற்றொரு இலையை தெய்வத்தின் புனிதமான பாதத்தில் வைக்க வேண்டும். பிறகு இடது கையின் கட்டை விரலை இடது கண் மீதும் இடது கையின் மோதிர விரலை வலது கண் மீதும் வைத்து கண்களை மூடியபடி இருக்க வேண்டும். அதன் பிறகு நைவேத்தியத்திலிருந்து வரும் நறுமணத்தை வலது கையின் விரல் நுனிகளைப் பயன்படுத்தி கடவுளை நோக்கி செலுத்த வேண்டும். அப்போது பஞ்ச பிராணங்கள் என்றழைக்கப்படும் (ஐந்து முக்கிய ஆற்றல்கள்) ஆற்றல்களுடன் தொடர்புடைய மந்திரங்களை ஜெபிக்க வேண்டும். அவை,
‘ஓம் பிராணாய ஸ்வாஹா,
ஓம் அபாணாய ஸ்வாஹா,
ஓம் வியானாய ஸ்வாஹா,
ஓம் உதானாய ஸ்வாஹா,
ஓம் சமனாய ஸ்வாஹா,
ஓம் பிரம்ஹனே ஸ்வாஹா’
என்பவை ஆகும்.
சொல்ல வேண்டிய மந்திரங்கள்
இதற்கு பிறகு, நைவேத்ய மத்யே பானியம் சமர்ப்பயாமி’ என்கிற மந்திரத்தை ஜெபித்தபடி பஞ்ச பாத்திரத்தில் வலது கையால் சிறிது நீரை விடவும். பிறகு பஞ்ச பிராணங்களுடன் தொடர்புடைய ‘ஓம் பிராணாய’ என்கிற மந்திரத்தை மீண்டும் ஒருமுறை ஜெபிக்கவும். பிறகு,
‘நைவேத்யம் சமர்ப்பயாமி,
உத்தராபோஷனம் சமர்ப்பயாமி,
ஹஸ்தே சமர்ப்பயாமி,
முகே சமர்ப்பயாமி’ என்று ஜெபித்தபடி வலது கையிலிருந்து தட்டில் நான்கு முறை தண்ணீர் விடப்பட வேண்டும்.
நாம் சமர்ப்பிக்கும் நைவேத்தியம் கடவுளை சேருகின்றது என்றும், தெய்வம் அதை சாப்பிடுகின்றார் எனவும் நாம் ஒரு பக்தி பாவத்தை கொண்டிருக்க வேண்டும். நைவேத்தியத்தை படைத்த பிறகு (பொதுவாக சிறிய அளவுகளில்) மீதமுள்ள மொத்த உணவில் அதை கலந்துவிட வேண்டும். இதனால் உணவை சாப்பிடும் அனைவரும் பயன்பெறுவர்.
எப்படி இருக்க வேண்டும்?
எந்தவொரு தெய்வத்திற்கும் நைவேத்தியம் படைக்கும்போது பக்தி பாவத்தோடு இருக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும். நைவேத்தியம் படைக்கும் பக்தனின் பக்தி பாவம் எந்த அளவுக்கு அதிகமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அந்த உணவை தெய்வங்கள் ஏற்றுக்கொள்வதற்கான சாத்தியங்களும் அதிகம். ஒரு நைவேத்தியத்தை படைக்கும் போது அது இறைவனை சென்றடைகிறது என்றும் அதை தெய்வம் ஏற்றுக்கொள்கிறது என்கிற மனோபாவத்துடன் பக்தி சிரத்தைகளுடன் நைவேத்தியத்தை படைக்க வேண்டும்.
நைவேத்தியத்தை படைக்க பயன்படுத்தும் வாழை இலை அல்லது தட்டில் உப்பை ஏன் பரிமாறக்கூடாது?
உப்பு பிரித்வி தத்துவத்துடன் (முழுமையான பூமி கொள்கை) மற்றும் அபதத்துவத்துடன் (முழுமையான நீர் தத்துவம்) தொடர்புடையது எனவே ராஜ தாம குணங்களின் ஆதிக்க அலைகளின் விகிதம் அதில் அதிகமாக ஈர்க்கப்படுகிறது. எனவே நைவேத்தியத்திற்காக படைக்கப்படும் இலையில்/தட்டில் ஒரு சிட்டிகை உப்பு கூட பரிமாறப்படக்கூடாது. இருந்தாலும், உப்பை பயன்படுத்தி தயாரித்த உணவுகளை தெய்வங்களுக்கு படைக்கலாம்.
நெய் அவசியம் ஏன்?
மிளகாய், உப்பு மற்றும் எண்ணெய் போன்றவை ராஜ தாம குணங்களின் ஆதிக்கத்தை கொண்டிருப்பதால் நைவேத்தியத்திற்கு உணவு சமைக்கும் போது இவற்றை குறைவான அளவே பயன்படுத்த வேண்டும். அதிக நெய்யை பயன்படுத்தலாம் ஏனெனில் அது சாத்வீக உணவாகும். நெய் சேர்ப்பதால் இது மற்ற பொருட்களையும் சாத்வீகமாக்குகிறது.
இலையில் முடிந்த வரை நிறைய சாத்வீக உணவுகளை சமைத்து பரிமாறவும் ஏனெனில் அத்தகைய உணவுகளுக்கு தெய்வங்களின் ஆசிர்வாத வடிவத்தில் வெளிப்படும் சாத்வீக அலைகளை உள்வாங்கிக் கொள்ளும் ஆற்றல் அதிகமாக இருக்கிறது.
நைவேத்தியத்தை இறைவனுக்கு படைப்பதற்கு முன் ஏன் மூடி வைக்க வேண்டும்?
உணவை மூடி வைக்கும் போது அதிலிருந்து வெளிப்படும் அலைகள் வளிமண்டலத்தில் சேராமல் கட்டுப்படுத்துகிறது.
நைவேத்தியத்தை படைக்கும் போது வாழை இலையை எப்படி வைக்க வேண்டும்?
நைவேத்தியம் கடவுளுக்கு வாழை இலையில் படைக்கப்படுகிறது. வாழை இலையின் காம்போடு ஒப்பிடும் போது அதன் நுனிப்பகுதிக்கு சாத்வீக அலைகளை வெளியிடும் ஆற்றல் அதிகமாக இருக்டகிறது. இந்த நீரூற்று போன்ற அலைகள் ஒரு தனிமனிதனைச் சுற்றியுள்ள சூழலில் ராஜ தாம குணங்களின் விகிதத்தை குறைக்க உதவுகிறது. எனவே தெய்வங்களுக்கு நைவேத்தியம் படைக்கும் போது இலையின் காம்புப் பகுதி கடவுளை நோக்கியும் அதன் முனைப் பகுதி நம்மை நோக்கியும் இருக்கும் படி பரிமாற வேண்டும்.