சர்வதேச புகழ்பெற்ற திருமலை திருப்பதி கோவிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் மிக முக்கியமான திருவிழா ஸ்ரீவாரி பிரம்மோத்ஸவம்  இந்த நிகழ்வின் போது தினமும் வெவ்வேறு வாகனங்களில் ஏழுமலையான் நான்கு மாட வீதிகளில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார் திருப்பதி ஏழுமலையானின் இந்த பிரம்மாண்ட திருவிழாவில் பங்கேற்க நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுகிறார்கள்.

தமிழகத்தில் இருந்து திருப்பதி ஏழுமலையானுக்கு ஆண்டுக்கு இரண்டு புனித பொருட்கள் மட்டுமே அனுப்பப்பட்டு வருகிறது. ஒன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிய மாலை, மற்றொன்று சென்னையில் இருந்து வந்த புனித குடைகள்

காஞ்சிபுரம் மற்றும் சென்னையில் ஆண்டுதோறும் இரண்டு சிறிய மற்றும் ஒன்பது பெரிய அளவிலான சிறப்பு குடைகள் தயாரிக்கப்படுகின்றன. பின்னர், சென்னையில் இருந்து திருப்பதி பிரம்மோத்ஸவ சமயத்தில் அலங்கரிக்கப்பட்ட பதினொரு குடைகளும் திருப்பதிக்கு அனுப்பப்படும் சென்னை சவுகார்பேட்டை சென்னகேசவா கோவிலில் பூஜைகளுடன்  துவங்குகிறது. பின்னர், இந்த புனித குடைகளின் ஊர்வலம் வடசென்னையின் பல்வேறு பகுதிகள் வழியாக சென்று இறுதியாக திருப்பதி தேவஸ்தானத்தை சென்றடைகிறது.

இந்த ஊர்வலம்  19ஆம் நூற்றாண்டில் தொடங்கியதாக கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக, புனித குடைகள் 10 அவதாரங்கள் மற்றும் 12 ஆழ்வார்களும் திருவீதி உலா வருகின்றனர். கூடுதலாக இந்த ஊர்வலத்தில் ஏழுமலையானுக்கு ஒரு கண்ணாடிப் பெட்டியில் பட்டுத் துண்டு காட்சிப்படுத்தப்படுகிறது. இந்த மாபெரும் ஊர்வலத்தில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்கின்றனர்.

                 திருப்பதி திருக்குடையும் யானை கவுனியும்
குடைகள் யானை கவுனி தாண்டும் வரலாறு

திருப்பதி ஏழுமலையான் தன் கல்யாணத்துக்காக குபேரனிடம் கடன் வாங்கி அதை இன்னமும் அடைத்து வருகிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்த கதை. ஏழுமலையான், தனது திருமணத்திற்காக யானை கவுனியில் கடன் வாங்கியிருந்தாராம். அதனால் அந்தப் பகுதி வரும்போது நிற்காமல் குடையைத் தூக்கிக்கொண்டு ஓடி வந்துவிடுவார்களாம். இது 180 வருடங்களாக நடந்து வரும் சம்பிரதாயம் என்கிறார்கள்.

யாத்திரை கொண்டு செல்லும் குடைகளில் இரண்டு மட்டுமே திருப்பதியில் சமர்ப்பிக்கப்படும். மற்றவை செல்லும் வழியில் உள்ள பைராகி மடத்துக்கும், திருவள்ளூர் கோயிலுக்கும் அளிக்கப்படும். திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் சமர்ப்பிக்கப்படும். இந்து தர்மார்த்த டிரஸ்ட் சமர்ப்பிக்கும் இந்த திருக்குடைகள் கருட சேவை மட்டுமின்றி ஆண்டு முழுவதும் திருமலை உத்ஸவங்களில் பயன்படுத்தப்படும்.

இந்தக் குடைகள் ஆதிசேஷனுக்கு நிகரான முக்கியத்துவம் பெறுகின்றன. திருப்பதி திருக்குடை ஊர்வலம் செல்லும் இடமெல்லாம் மங்களம் பெரும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. திருப்பதிக் குடை ஊர்வலம் செல்லும் வழியெங்கும் வசிக்கும் பொதுமக்கள், ஏழுமலையான் பக்தர்கள் திருக்குடைகளை தரிசனம் செய்ய கூடுகின்றனர்.