பகவானின் ஒவ்வொரு திருநாமமும் வெறும் பெயர்கள் அல்ல; அவனுடைய கல்யாண குணங்களை மிக எளிமை யாகச் சொல்பவை; கடலளவு தண்ணீரை அப்படியே உள்ளங்கைக்குள் அடக்கிவிடுகிற சாதுர்யத்துடன், மிகப் பெரிய குணத்தை, ஒற்றைத் திருநாமத்தின் மூலமாக நமக்கு உணர்த்துபவை!
பகவானின் ரூபம் பரரூபம், வியூக மூர்த்தம், விபவாதாரம், அந்தர்யாமி, அர்ச்சாவதாரம் என ஐந்து நிலைகளாகப் பிரித்துச் சொல்லப்பட்டுள்ளது. பரரூபம் என்பது ஸ்ரீவைகுண்டத்தில் பரந்தாமன் எழுந்தருளியுள்ள நிலை; வியூக மூர்த்தம் என்பது திருப்பாற்கடலில் காரண- காரியத்துக்காக திருமால் கொண்ட திருக்கோலம்; விபவாதாரம் என்பது அவதாரக் கோலங்கள்; அந்தர்யாமி என்பது நமக்குள் இருக்கிற இறைத்தன்மையின் அரூப நிலை; அர்ச்சாவதாரம் என்பது இன்றைக்கு திருக்கோயில்களில் கருவறையில் குடிகொண்டிருக்கிற இறைத் திருமேனி! எத்தனைத் திருவுருவங்கள் இருந்தாலென்ன… பரந்தாமன் ஒருவனே! எத்தனைத் திவ்விய நாமங்கள் கொண்டால் என்ன… இறைவன் ஒருவனே!
இறைவன் போற்றுதற்கு உரியவன்; அவனை எப்படி வேண்டுமானாலும் போற்றலாம்; போற்றித் துதி பாடலாம்! அதன் முதல் கட்டமாக, அவனைப் போற்றுகிற முதல் திருநாமம்… வசுரேதாஹா!
அதாவது, இறைவன் தேஜஸ் கொண்டவன்; பளிச்சென்று காட்சி தருபவன்; கடவுள் என்பவரைத் தரிசிக்க ஆயிரம் கண்கள்கூடப் போதாது. ஏனெனில், ஒளிமயமானவன் அவன். ஜோதி வடிவமே பகவான். ஸ்ரீமந் நாராயணனிடம் இருந்து புறப்பட்ட சுடரொளியானது, தேவகியின் வயிற்றில் சென்று கர்ப்பமாகத் தரித்தது என்கின்றனர். தேவர்களையும் உலகத்தையும் கம்சனிடம் இருந்து காப்பதற்காக, கடவுள் தாமே ஜோதியாக வந்து, தேவகியின் கர்ப்பப்பைக்குள் புகுந்துகொண்டார் என்றால், இந்த உலகைக் காப்பதில் பகவானுக்கு இருக்கிற கடமையையும் கருணையையும் நாம் உணரவேண்டும்.
ஆக, பகவானின் திருநாமங்களைக் கேட்டாலோ சொன்னாலோ புண்ணியம்தான்! ஆனால்… அது ஒன்று மட்டுமே நமக்கு மோட்சத்தைக் கொடுக்கும் என நினைத்துவிடக்கூடாது.
பிற உயிர்களிடத்தில் கருணை, இறைவனிடத்தில் பக்தி இந்த இரண்டும் ஒரு மனிதனுக்கு மிகவும் அவசியம். கடவுளின் திருநாமங்களைச் சொல்லச் சொல்ல… உள்ளே நம் மனதுள் பேரமைதி மெள்ள மெள்ளப் பரவும். அமைதி இருக்கிற இடத்தில், ஆரவாரத்துக்கு வேலையில்லை; அலட்டல் அங்கே இருக்காது. அலட்டலும் கர்வமும் இல்லையெனில், அங்கே அடுத்தவர் பற்றிக் கருணையுடன் சிந்திக்கத் துவங்கிவிடுவோம்.
பிற உயிர்களிடம் காட்டுகிற கருணையும், அமைதியான உள்ளமும் கொண்டிருக்க… அங்கே கடவுள் குறித்த சிந்தனை, அவன் மீதான அளப்பரிய பக்தி நம்மையும் அறியாமல் அதிகரிக்கும். பக்தி அதிகரிக்க, அதிகரிக்க… கடவுளுக்கும் நமக்குமான தொலைவு சுருங்கிக்கொண்டே வரும். அந்த அண்மை, ஆண்டவனிடம் இன்னும் இன்னும் என்று மனம் ஒன்றச் செய்யும். ‘நீயே கதி’ என்று பகவானது திருவடியைப் பற்றிக் கொள்ளத் தூண்டும். ஒரு கட்டத்தில், ஸ்ரீகிருஷ்ணரின் திருவடியைப் பற்றிக்கொண்டே திவ்விய நாமங்களைச் சொல்லிக்கொண்டே, வேறு எதையும் சிந்திக்காத நிலை ஏற்படும். அதன் பெயர்… சரணாகதி! இறைவனின் திருவடியில் சரணடைந்துவிட்டால், நமக்கு மோட்சம் என்பது நிச்சயம்!
இவை அத்தனைக்கும் ஆரம்பமாக இருப்பது, பகவானின் திவ்விய நாமங்கள்! அவனது நாமங்களைச் சொல்லிக் கொண்டே இருந்தால், மனதில் படர்ந்திருக்கிற இருள் மறைந்துவிடும்; மெள்ள மெள்ள ஒளி ஊடுருவி, உள்ளுக்குள் வியாபிக்கத் துவங்கிவிடும்.
ஏனெனில், ஜோதி வடிவானவர் ஸ்ரீகிருஷ்ணர் !